Doctor Vikatan: நான் இப்போது 6 மாத கர்ப்பிணி. இது எனக்கு இரண்டாவது கர்ப்பம். முதல் பிரசவத்தின்போது வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டேன். இந்த முறையும் அந்த அரிப்பு பயத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்ன காரணம்… இதிலிருந்து விடுபட என்ன வழி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்

கர்ப்பகாலத்தில் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாப் பெண்களுக்கும் சகஜமானது. குறிப்பாக கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் அது அதிகமாக இருக்கும். ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கி, வயிற்றுத் தசை விரிவடைவது வரை இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
முதல் விஷயம் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சியாவது தடுக்கப்பட்டு, அதனால் ஏற்படும் அரிப்பும் தடுக்கப்படும்.

அரிப்பு அதிகமாக இருப்பவர்கள் வயிற்றுப்பகுதியைச் சுற்றி கேலமைன் லோஷன், கற்றாழை ஜெல் அல்லது செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயைத் தடவலாம். வாசனை சேர்க்காத, ஒவ்வாமையை ஏற்படுத்தாத மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் இந்த மாய்ஸ்ச்சரைசரை வயிற்றுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறைகூட உபயோகிக்கலாம்.
குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்பும் அதிக வாசனை கொண்டதாக இல்லாமல் மாய்ஸ்ச்சரைசர் அதிகமுள்ளதாக இருக்கட்டும். வாசனை சேர்த்த சோப்புகள் பிரச்னையைத் தீவிரப்படுத்தலாம். அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும். சூடான நீர், சரும வறட்சியை அதிகப்படுத்தும். அதனால் அரிப்பும் தீவிரமாகும்.
குளிக்கும்போது உடலைத் தேய்க்கும் நார், பிரஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். மென்மையான டவல் கொண்டு வயிற்றுப்பகுதியை லேசாகத் துடைத்து காயவிடலாம். தளர்வான, மென்மையான காட்டன் உடைகளை அணிவது அவசியம். துணிகளைத் துவைக்கவும் மைல்டான டிடெர்ஜென்ட் பயன்படுத்தவும்.

மேற்குறிப்பிட்ட சின்னச்சின்ன வழிகளே உங்களுக்கு நிவாரணம் தரும். அதையும் தாண்டி அரிப்பு தொடர்ந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவும். ஏனெனில் அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு முறையான பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.