புதுச்சேரி: “தமிழக அரசைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை!” – என்ன சொல்கிறார் தமிழிசை ?

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும். எச்சரிக்கை முன்னேற்பாடுகளை சரியாக எடுத்திருக்க வேண்டும். தமிழக மழை வெள்ளத்தில் திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” என்று தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழிசையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல, “தமிழக அரசை குறை கூறுவதற்கு தமிழிசைக்கு எந்த அருகதையும் கிடையாது.

முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, தான் இன்னும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற பழைய  துருப்பிடித்த வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி அவர் பா.ஜ.க தலைவராக இருந்தபோது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ, அதே பேச்சைத்தான் தற்போது ஆளுநராக இருக்கும்போதும் பேசி வருகிறார். தமிழிசை அவர்கள் முடங்கிக் கிடக்கும் புதுச்சேரியை முதலில் மீட்டெடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழக அரசைப் பற்றி பேசட்டும்” என்று கடுமையாக விமர்சித்ததுடன், புதுச்சேரியில் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்னைகளையும் பட்டியலிட்டிருந்தார், புதுச்சேரி எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “தூத்துக்குடியில் கடுமையான மழை பெய்து, மக்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் நான் போட்டியிட்டிருக்கிறேன். அப்பகுதி மக்கள் எனக்கு முழுமையான ஆதரவை தரவில்லை என்றாலும், கொஞ்சம் ஆதரவை கொடுத்தார்கள். அதனால் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்களுக்குச் சென்றேன். ஆனால் அங்கு 15 கிராமங்களை பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு இன்னும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கருத்தைத்தான் கூறினேனே தவிர, அது என் சொந்த கருத்து கிடையாது.

புதுச்சேரியில் அனைத்தும் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்துப் பணிகளும் சரியாக நடப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, முதல்வர் முன்னிலையில் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியதைப்போல, தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் அங்கு செல்லவில்லை. சபாநாயகர் அப்பாவு அவர்கள் கூறியதைப்போல, ஆய்வு செய்வதற்காகவும் நான் அங்கு செல்லவில்லை. இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருக்கும் எனக்கு இதுகூட தெரியாதா? தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் துன்பத்தில் பங்கெடுத்து, ஆறுதல் கூறுவதற்காகவே அங்கு சென்றேன். தமிழக அரசை குற்றம் சொல்வது என் நோக்கம் கிடையாது. மக்களின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் கருத்தை தெரிவித்தேன். தமிழக அரசுக்கு மத்திய அதிகாரிகள் கூறிய பாராட்டுகள் சும்மாதான்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.