புதுடில்லி, ‘எம்.பில்., படிப்பு அங்கீகரிக்கப்பட்ட படிப்பல்ல; ஆகையால் மாணவர்கள் யாரும் அதில் சேர வேண்டாம்’ என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.
கற்பித்தல் பணிக்கு எம்.பில்., படிப்பு அவசியம் என கருதப்பட்ட சூழலில், அதை ஓர் தகுதியாக கருத முடியாது எனக் கூறி, 2022 – 23ம் கல்வியாண்டில் இருந்து அந்த பட்டப்படிப்பு முழுதும் நீக்கப்படுவதாக பல்கலை மானியக் குழு அறிவித்து இருந்தது.
அதேசமயம், பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்கு எம்.பில்., தகுதியாக பார்க்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஒரு சில கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து எம்.பில்., படிப்பை வழங்கி, மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக பல்கலை மானியக் குழுவுக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், பல்கலை மானியக் குழு செயலர் மணீஷ் ஜோஷி கூறியதாவது:
சில பல்கலைகள் எம்.பில்., படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
இந்த படிப்பு அங்கீகரிக்கப்பட்ட படிப்பல்ல. யு.ஜி.சி., விதிகளின்படி, உயர்கல்வி நிறுவனங்கள் எந்தவித எம்.பில்., படிப்புகளையும் வழங்கக் கூடாது. எனவே, எம்.பில்., படிப்புகளுக்கு எந்த பல்கலையும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம்.
அவ்வாறு செய்திருந்தால், வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கைகளை உடனடியாக நிறுத்தவும். மாணவர்களும் எந்த நிறுவனத்திலும் எம்.பில்., படிப்பில் சேர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement