சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன.17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-2024-ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜன.13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன. 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.2 சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.
18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள். இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.பெருநகர சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளியிடப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னையில் ஜன.13 முதல் ஜன.17 வரை நடத்தப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் காகர்லா உஷா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு கேபிள் டிவி கார்பரேஷன், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் போன்ற 16 அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.