ஆந்திராவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, தெலங்கானா மாநில அரசியலில் பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டவர் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஆனாலும், சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் அவர் விலகியிருந்தார். தெலங்கானாவில் தனக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இல்லை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேருவதென்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
தன்னுடைய தந்தை ஒய்.எஸ்.ஆரின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவரது அரசியல் வாரிசாக காங்கிரஸில் தொடர்ந்து பயணித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால், அவர் எதிர்பார்த்த முதல்வர் பதவி அவருக்குத் தரப்படவில்லை. ஆகையால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, 2019-ல் ஆட்சியதிகாரத்தை அவர் கைப்பற்றினார். தற்போது, அவரது தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் ஆந்திராவில் நடைபெற்றுவருகிறது.

பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டியோடு சென்றுவிட்டதால், ஆந்திராவில் காங்கிரஸின் பலம் சரிந்துவிட்டது. அங்கு, பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு கிடையாது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தான் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.
அண்ணன் கட்சியின் ஆட்சியில் ஆந்திராவில் நடக்கும் சூழலில்தான், தெலங்கானா அரசியலுக்குப் போனார் ஒய்.எஸ்.ஷர்மிளா. தெலங்கானாவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களை தன்னை ஆதரிப்பார்கள் என்று நம்பித்தான், தெலங்கானா அரசியலில் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

ஆனால், அங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த கே.சந்திரசேகர ராவை மீறி இவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான முயற்சியை மேற்கொண்டார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்தார் என்று செய்திகள் பரபரத்தன. ஆனால், காங்கிரஸில் சேராதது மட்டுமல்ல, தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் முடிவெடுத்தார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்திருக்கும் சூழலில், தற்போது அவர் காங்கிரஸில் இணையவிருக்கிறார். காங்கிரஸுடன் தன்னுடைய கட்சியை இணைப்பது குறித்து தன் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

தற்போது, காங்கிரஸுடன் இணைவது தொடர்பான அவரது அறிவிப்பு ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் அவருக்கு முக்கிய பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கான பதவிகள் குறித்த பேச்சுவார்த்தை காங்கிரஸ் தலைமையுடன் நடைபெற்றிருக்கிறது. அதன்படி, தெலங்கானாவிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ, மாநிலங்களவை எம்.பி-யாக ஆவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படலாம். அல்லது, ஆந்திராவின் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டு, கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்கிறார்கள்.

மற்றொரு வாய்ப்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி-யாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் அடிபடுகின்றன. இவற்றில் எதை அவர் தேர்வுசெய்யப்போகிறார் என்பதைவிட, ஆந்திரா அரசியல் களத்தில் யாரை எதிர்த்து அவர் அரசியல் செய்யப்போகிறார் என்பதுதான் முக்கியம். ஆந்திராவில் அவரது முக்கிய அரசியல் எதிரியாக இருக்கப்போகிறவர் சாட்சாத் ஜெகன்மோகன் ரெட்டிதான். தெலங்கானா அரசியல் களத்தில் டம்மியாக வலம்வந்துகொண்டிருந்த ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திரா அரசியலில் சக்திவாய்ந்த தனது சகோதரருக்கு எதிராக அரசியல் செய்யப்போகிறார். எது எப்படி இருக்கும் என வரப்போகிற நாள்களில் தெரிந்து விடும். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும் என்பதால் தேர்தல் காலமும் வெகு தூரமில்லை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.