செந்தில் பாலாஜி வழக்கு: `900 பேரைச் சேர்த்திருக்கிறோம்!' – சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர்மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தனர்.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

செந்தில் பாலாஜி

அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், வழக்கை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் பெறும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்ட சிலர்… போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பில், தங்களை தேவையின்றி வழக்கில் சேர்த்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது நீதிபதி, “கூடுதல் குற்றபத்திரிகையில் சுமார் 900 பேர் வரை சேர்த்திருக்கின்றனர். எனவே, அனைவருக்கும் விசாரணை அனுமதி கிடைத்தவுடன்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க முடியும்” எனக் கூறி, விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.