ராமநாதபுரம்: மூன்று பெரிய மின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தமிழக அரசு குளறுபடி செய்து வருகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி திட்டங்களை அளித்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல்(பெல்) நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தங்களை தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினார்.
ஆனால், எண்ணூர் அனல்மின்நிலைய பணியை பெல் நிறுவனத்திற்கு அளிக்க மறுத்து, தனியார் நிறுவனமான பிஜிஆருக்கு கொடுத்து, அதில் ஊழல் செய்துள்ளனர். அதேபோல் வடசென்னை அலகு-2, உடன்குடி அனல் மின்நிலையம், குந்தா நீரேற்று மின்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தவிடாமல் தமிழக அரசு குளறுபடி செய்து வருகிறது. இம்மின் திட்டங்கள் வந்திருந்தால் தனியாரிடம் மின்சாரம் வாங்கும் நிலை இருக்காது.
மத்திய அரசு வெள்ள நிவாரணம் குறைந்தளவே கொடுத்துள்ளதாக குறை கூறுகின்றனர். 2004 முதல் 2014 வரை திமுக அங்கம் வகித்த மத்திய அரசு வழங்கிய நிதியை முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ராமநாதபுரத்தில் அரசு சட்டக் கல்லூரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல், சட்டக்கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்கும் நிலை உள்ளது. அதேபோல் மத்திய அரசு நிதியில் ராமநாதபுரம் நகரில் கட்டப்பட்ட அறிவுசார் மையமும் திறக்கப்படாமல் உள்ளது.
டாஸ்மாக்கில் தரமற்ற நிறுவனங்களிடமிருந்து மது வாங்கி அரசு விற்று ஊழல் செய்து வருகிறது. மதுவால் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதும், கொலை, குற்ற வழக்குகளில் ஈடுபட்டும் வருகின்றனர். வரும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் 9 தொகுதிகளில் ராமநாதபுரமும் ஒன்று என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கும்போது கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்யும். ராமநாதபுரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையால் பாதிக்கப்படும் கிராம மக்களுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரயில்வே மேம்பாலம் பெற்றுத்தந்தார். அதற்கு நன்றிக் கடனாக அக்கிராம மக்கள் ஊராட்சி தீர்மானத்துடன் அச்சாலைக்கு நிர்மலா சீதாராமன் பெயர் வைத்தனர். ஆனால் அந்த பெயர் பலகையை தமிழக அரசு உடனடியாக அகற்றியுள்ளது.
ராமர் கோயிலை மத ரீதியாக பார்க்க வேண்டியதில்லை. அது இந்து கலாச்சாரத்தின், பண்பாட்டு அடையாளமாகும் என்றார். பேட்டியின்போது பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.