தமிழை பொய்யாக புகழ்கிறார் பிரதமர் மோடி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர், வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியுள்ளார். ஆனால், தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக அரசு அமைந்த கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அதை எதிர்த்து தமிழக முதல்வர் குரல் கொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

ஆனால், பிரதமர் மோடியோ, ‘உலகில் எந்த இடத்துக்கு சென்றாலும் தமிழகம், தமிழ்மொழி பற்றி புகழ்ந்து பேசாமல் என்னால் இருக்க முடிவதில்லை’ என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

கடந்த 2017 முதல் 2022 வரை டெல்லியில் உள்ள சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,074 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மைசூருவில் உள்ள மத்திய அரசின் இந்திய மொழிகளுக்கான நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.53.61 கோடி மட்டுமே.

தமிழ், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை பொய்யாக புகழ்ந்து கூறுவதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.