பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிற படம் `தங்கலான்’. டீசர் வந்த பிறகு அதன் மேக்கிங் பற்றியும் விக்ரமின் தோற்றம், நடிப்பு பற்றியும் பல மடங்கு எதிர்பார்ப்பு எகிறி விட்டது.
குறிப்பாக படத்தின் கதை, அதை எப்படிக் கையாண்டு இருப்பார்கள் என்ற வகையிலும் ஒருவித எதிர்பார்ப்பு இருப்பதால், ‘படம் எப்போது ரிலீஸ்’ என இணையதளங்களில் ரசிகர்கள் ஆர்வம் பெருகி கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
முதலில் ‘தங்கலான்’ பொங்கல் வெளியிடாகத்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில தனிப்பட்ட சந்திப்புகளிலும் விக்ரமும், டைரக்டர் பா.இரஞ்சித்தும் அதையேதான் உறுதி செய்தார்கள். படத்திற்கான இசையமைப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே நிதானமாகத் தேவையான நாள்களை எடுத்துக்கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் ஏற்கெனவே முடித்துக் கொடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. அவை பொருத்தமான விதத்திலும் அமைந்திருந்ததால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ‘தங்கலான்’ வெளியீடு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. படம் ஏற்கெனவே எல்லா ஏரியாக்களிலும் நல்ல விதமாக விற்பனையும் ஆகிவிட்டது என்கிறார்கள்.
அந்த வகையில் திருப்தி ஆன தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், பா.இரஞ்சித்தும் கூடிப் பேசியிருக்கிறார்கள். அதில் இன்னும் கிராபிக்ஸ் ஒர்க்கை மேம்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இது பற்றி படத்தை வாங்கியவர்களிடம் பேசியதில் அவர்களும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் வெளியீட்டுக்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

அதனால் கிராபிக்ஸை மட்டும் மறுபடியும் செழுமைப்படுத்தும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. அந்த வேலைகள் முடிய பிப்ரவரி மாதத்தின் கடைசியாகி விடும் என்கிறார்கள். அதனால் மார்ச் மாதத்தைத் தற்காலிகமாக முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால், பரீட்சைகள் தொடங்கிவிடும் என்பதால் இன்னும் ஒரு மாதம் தள்ளி ஏப்ரல் இறுதியில் ‘தங்கலா’னை வெளியிடலாம் என்ற முடிவுக்கும் தயாரிப்புக் குழுவினர் வரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் ஏற்கெனவே ‘தங்கலான்’ படத்துக்கு குறித்திருந்த தேதியில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை ரிலீஸ் செய்கிறார் அதன் தயாரிப்பாளரான பா.இரஞ்சித்.
ஆக `தங்கலான்’ நம் பார்வைக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் என்பதுதான் கடைசிக் கட்ட தகவல்.