புதுச்சேரி: `ரூ.10 கோடியில் திருமண மண்டபம் கட்டுகிறார் முதல்வர் ரங்கசாமி!' – நாராயணசாமி சொல்வதென்ன?

புதுச்சேரியில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் அடைமழை பெய்துவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பாலனுடன் மழை பாதிப்புகளை பார்வையிட்டோம். பாவாணர் நகர், நடேசன் நகர், பூமியான்பேட்டை மற்றும் ஜவகர் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் வீடுகளை பார்த்தோம். அந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி, தெருக்களில் 5 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. 12 செ.மீ மழைக்கே இவ்வளவு தண்ணீர் அங்கு நிற்பதற்கு காரணம், கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததுதான். நாங்கள் பார்வையிட்ட தகவலை கேள்விப்பட்டுதான், முதலமைச்சர் ரங்கசாமி அங்கு வந்தார். இல்லையென்றால் அந்த பகுதியை அவர் திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த அடைமழையிலும் ஒரு அதிகாரியைக்கூட காணவில்லை. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என எந்த அதிகாரிகளும், ஆறுதல் சொல்வதற்குக்கூட அந்த மக்களை சந்திக்கவில்லை.

நாராயணசாமி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணங்களை கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. காரைக்கால் பகுதியில் நெற்பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொண்டபோது, காங்கிரஸ் சார்பில் இரண்டு நாள்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம். இந்த பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலமாக, பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. இந்த என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு ஒருபுறம் மின் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள். மற்றொரு புறம் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணாக இந்த அரசு செயல்படுகிறது. மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்க நீங்கள் முடிவெடுத்த பிறகு, பிரீபெய்டு மின் மீட்டரைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன?

அதற்காக ரூ.330 கோடி ரூபாயை செலவு செய்யப் போகிறீர்கள். அது வீண் செலவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை, மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். புதுச்சேரி மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மின்சார வரியை உயர்த்தினார்கள். தற்போது மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர், மின் துறை அமைச்சர், ஆளுநர் மூவரும், மத்திய மின் ஒழுங்காற்றுக் குழுவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதனடிப்படையில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் சராசரியாக 65 பைசா உயர்த்துகிறார்கள். இதன் மூலம் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணத்தைக் கட்ட முடியாமல் மக்கள் சிரமப்படுவார்கள். ஒரு பக்கம் மின் கட்டணம் உயர்வு, மறுபக்கம் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம். இந்த இரண்டையும் கொண்டு வந்து மக்களை நசுக்குகிறது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு. இந்த ஆட்சியில் கலால்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, பத்திரப்பதிவுத்துறை, குடிமைப்பொருள்துறை என அனைத்து துறைகளில் நடக்கும் ஊழல்களை நாங்கள் ஏற்கெனவே பட்டியல் போட்டு காட்டியிருக்கிறோம்.

மின் கட்டணம்

அந்த வரிசையில் தற்போது ஒரு நூதனமான ஊழல் வெளியாகியிருக்கிறது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதற்கு இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் தங்கள் தொழிற்சாலை உரிமங்களை யாராவது புதுப்பிக்கச் சென்றால், அவர்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். உரிமத்தை மாற்ற வேண்டும் என்றால் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். அதேபோல மின்சாரத்தில் ஹார்ஸ்பவரை உயர்த்த, 10 ஹார்ஸ் பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த துறையின் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வேண்டிய ஒரு நபர், வில்லியனூரில் அதற்கு புரோக்கராக இருக்கிறார். அந்த புரோக்கரிடம் பணம் சென்றால்தான், ஹார்ஸ் பவரை உயர்த்துவதற்கான அனுமதி கிடைக்கும். இல்லையென்றால் அனுமதி கிடைக்காது. ஒருபுறம் புதிய தொழிற்சாலைகள் இல்லை. இருக்கின்ற தொழிற்சாலைகளும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொழில்துறைக்கு மாமூல் கொடுத்தால்தான்  இந்த வேலைகள் நடக்கின்றன. அந்த பணம் புரோக்கரிடம் இருந்து எங்கே செல்கின்றது என்று உங்களுக்கு தெரியும். தொழிற்சாலை அதிபர்கள் அமைச்சரை சந்திக்கும்போது, இது பகிரங்கமாகவே பேசப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் வாங்குவதற்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய தொகை, ரூ.20 கோடி. அதற்கான டெண்டர் விடப்பட்டபோது, முதல் முறை யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது அந்த துறையின் செயலாளராக இருந்த குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள், `இந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. டெண்டர் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னதால், அந்த கோப்பு நிற்கிறது. இல்லையென்றால் அதில் மிகப்பெரிய தொகையை இவர்கள் கமிஷன் அடித்திருப்பார்கள். அதேபோல மாணவர்களுக்கான லேப்டாப்பில் ரூ.8,000 பேரம் பேசி, தனியார் கம்பெனியில் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் குளோபல் டெண்டர் மூலமாகவே லேப்டாப் கொள்முதல் செய்ய வேண்டும் என்று, தலைமைச் செயலாளர் கூறிவிட்டதால், அதுவும் கிடப்பில் இருக்கிறது. இப்படி தனியாரிடம் பேரம் பேசி, லஞ்சம் பெற்று, தரமற்ற பொருள்களை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேபோல காவல்துறையிலும் ஊழல் பகிரங்கமாக நடக்கிறது.

உழவர்கரை தொகுதியில் இருக்கும் ஒருவர், தற்போது ஜெயா நகரில் இரண்டு அடுக்கு கட்டடத்தைக் கட்டி வருகிறார். அவரிடம் சென்று பணத்தைக் கொடுத்தால், சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். அதற்கும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கென்று தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அந்த தொகை எங்கு செல்கிறது என்றும் உங்களுக்குத் தெரியும். இப்படி முதலமைச்சர் துறை தொடங்கி அனைத்து துறைகளிலும், ஊழலைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று, அவர்கள்மீது பழியைப் போட்டு முதலமைச்சர் தப்பிக்க நினைக்கிறார். பினாமிகள் பெயரிலும், தங்கள் மனைவிகளின் பெயரிலும் இந்த அமைச்சர்கள் சொத்துகளை வாங்கிக் குவித்து வருகிறார்கள். முதலமைச்சர் தன்னுடைய தொகுதியில் 10 கோடி ரூபாயில் திருமண மண்டபத்தைக் கட்டி வருகிறார். எங்கிருந்து அதற்கான நிதி வந்தது… அவர் என்ன தொழில் செய்தார்… பல அமைச்சர்கள் சொத்துகளை வாங்கிய விவரங்கள் எங்களிடம் வந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி புதுச்சேரி மக்களை சுரண்டுகிற ஆட்சி என்பது நிரூபணமாகியிருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.