2023-ல் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்

மாலி: கடந்த 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் (டிச. 13 வரை) மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 939 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவு வந்துள்ளனர். இது கடந்த 2022-ம் ஆண்டைவிட 12.6% அதிகம். அதிகபட்சமாக 2 லட்சத்து 9,198 இந்தியர்கள் மாலத்தீவு வந்துள்ளனர். அடுத்தபடியாக ரஷ்யா (2,09,146), சீனா (1,87,118) ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

பிரிட்டன், (1,55,730), ஜெர்மனி (1,35,090), இத்தாலி (1,18,412), அமெரிக்கா (74,575), பிரான்ஸ் (49,199), ஸ்பெயின் (40,462), சுவிட்சர்லாந்து (37,260) ஆகிய நாட்டினர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாக மாலத்தீவு இருந்து வருவதை விமானப் போக்குவரத்துத் துறையின் புள்ளி விவரமும் கூறுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியா, மாலத்தீவு இடையே நேரடி விமான சேவை மூலம் 51 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இது அடுத்த ஆண்டில் இதே காலத்தில் 60 ஆயிரமாக அதிகரித்தது. 2020-ம் ஆண்டு கரோனா பாதிப்பு இருந்த போதிலும் 32 ஆயிரம் பேர் பயணித்தனர். 2021-ல் இது 1.15 லட்சமாக அதிகரித்தது. ஆனால் 2022-ல் இது கணிசமாக குறைந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படம் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து மாலத்தீவை புறக்கணிப்போம் என்று இந்தியர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.