ராமர் கோயில் திறப்பு நாளில் 32 ஆண்டு கால மவுன விரதத்தை முடிக்கும் மூதாட்டி – பின்னணி என்ன?

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் 32 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22-ஆம் தேதியுடன் தனது கனவு நனவாகிவிட்டதாக, தனது 32 ஆண்டு கால ‘மவுன விரதத்தை’ முறித்துக் கொள்ளவும் இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ல் நடைபெறவிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்திய அளவில் பல்வேறு மக்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இதையொட்டி, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது மூதாட்டி 32 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22-ஆம் தேதியுடன் தனது கனவு நனவாகிவிட்டதாக, 32 ஆண்டு கால ‘மவுன விரதத்தை’ முறித்துக் கொள்ளவும் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதற்கான காரணம்தான், இது எப்படி சாத்தியம் என நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கிறது.

1986-ஆம் ஆண்டில் தனது கணவர் தேவகினந்தன் அகர்வாலை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மவுன விரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டுள்ளார்.

2020 வரை தினமும் 23 மணி நேரம் மவுன விரதமும், மதியம் 1 மணி நேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020-ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மவுன விரதம் இருந்துள்ளார். அதிலிருந்து இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் பேசியுள்ளார். சரஸ்வதி கடந்த திங்கள்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தை துவங்கியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் ஜனவரி 22-ஆம் தேதி மவுன விரதத்தை முடித்துக் கொள்ளவிருப்பதாக சரஸ்வதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சரஸ்வதி ஒரு நாளில் 6 முதல் 7 மணிநேரங்களுக்கு தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் பால் குடிப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மாலையில் ராமாயணம், பகவத் கீதை போன்ற சமயப் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.