‘எங்களுக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று காட்டிக்கொள்ள எடப்பாடி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார். மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பங்கேற்றபோதுகூட, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போனார் எடப்பாடி. ஆனால், அதே மதுரையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ, கரைவேட்டி கட்டாத பா.ஜ.க-காரராகவே நடந்துகொள்கிறாராம்.

சமீபத்தில், மதுரையில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உதயகுமார், “குரு வழிபாடே சனாதன தர்மம்” எனப் புது விளக்கம் கொடுத்திருப்பது ர.ர-க்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. “சனாதனச் சர்ச்சை ஓய்ந்தே பல மாதங்கள் ஆகிடுச்சு… இவர் என்னன்னா, பா.ஜ.க-வின் ஊதுகுழல்போல சனாதனம் குறித்துப் பேசிக்கிட்டு இருக்காரு. தி.மு.க Vs அ.தி.மு.க-ன்னு களத்தை மாற்ற நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்குறீங்க… இவரைக் கூடவெச்சுக்கிட்டு, நீங்க என்ன உழைச்சாலும் வேஸ்ட்டுதான்” என்று எடப்பாடியிடம் புகாரளித்திருக்கிறார்களாம் ர.ர-க்கள்.
ஈட்டி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘பாதை போடும் துறை’யின் பெண் உயரதிகாரி ஒருவர் டெல்லிக்கும் நெருக்கமாகிக்கொண்டிருக்கிறாராம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக துறை அமைச்சரை முடக்கக் காய்நகர்த்திவரும் டெல்லிக்கு, அந்தப் பெண் அதிகாரி சில உதவிகளைச் செய்துவருகிறாராம். குறிப்பாக, தேசியத் திட்டங்களில் ஈட்டி தரப்பு அடித்த கமிஷன் விவரங்களையெல்லாம் சேகரித்து, டெல்லிக்கு ஓலையாகவே அனுப்பிவிட்டாராம் அந்த அதிகாரி. இந்த விவகாரம் அமைச்சர் தரப்புக்குத் தெரியவந்ததும் கடும் கோபத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இது குறித்து தலைமைக்கு எடுத்துச் சொன்ன அமைச்சர் தரப்பு, “அவரைத் துறையிலருந்து மாத்தி டம்மியான பதவியைக் கொடுத்து உக்காரவெக்கணும்… அப்பதான் இந்த மாதிரி துரோகம் செய்யுற மற்ற அதிகாரிகளுக்கும் பயம் வரும்” எனக் கோரிக்கை வைத்திருக்கிறது. இந்தப் பிரச்னையால், துறைக்குள் ஒரு பூகம்பமே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக டெல்லியில் தி.மு.க-வின் முக்கிய அணியின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்குச் செல்லும் நிர்வாகிகளிடம், “நான் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட விமானத்தில்தான் வர வேண்டும்” என அந்த அணியின் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர் உத்தரவிட்டிருக்கிறாராம். இதைக் கேட்டு ஷாக்கான நிர்வாகிகள், “போராட்டத்தில் சரியான நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதானே… நாம் எந்த விமானத்தில், எப்போது வந்தால் இவருக்கென்ன?” எனக் கொதிக்கிறார்கள். விசாரித்தால், “அந்த முக்கியப் பொறுப்பிலிருப்பவரும் அதே விமானத்தில்தான் செல்கிறார். அவருடன் மிகப்பெரிய கூட்டமே டெல்லிக்குக் கிளம்பிச் சென்றது எனத் தலைமையிடம் காட்டிக்கொள்ளவே இப்படியொரு திட்டம்’’ என்கிறார்களாம். ‘கைக்காசு போட்டு வாங்க… ஆனா, என் தலைமையில வாங்க…’ என்று சொல்லாமல் சொல்கிறாரே என்று சலித்துக்கொள்கிறார்கள் அணி நிர்வாகிகள்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வசமுள்ள வணிக வரித்துறையில், சி.பி.ஐ அதிரடி ரெய்டு நடத்தி நான்கு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதுதான் அந்த மாநிலத்தின் இப்போதைய ஹாட் டாப்பிக். ஆனால், இந்தத் துறையை கவனித்துவரும் முதல்வருக்கு இப்படி ஒரு ரெய்டு நடத்தப்பட்டதே தெரியாது என்பதுதான் இதில் சோகமே. முதல்வரின் துறையில் இப்படி ஒரு ரெய்டு நடந்திருப்பது பற்றி மறுநாள் காலையில்தான் முதல்வருக்கே தகவல் தெரிவித்திருக்கிறார்கள் மாநில அதிகாரிகள்.

கொதித்துப்போன முதல்வர் தரப்பு, புதுவையில் இருக்கும் டெல்லி பெண் பிரதிநிதியைத் தொடர்புகொண்டு, “உங்களுடன் கூட்டணி வைத்ததற்கு, நீங்கள் செய்யும் கைம்மாறு இதுதானா… ஒரு வார்த்தைகூட எங்களிடம் சொல்லாமல் முதல்வரின் துறையிலேயே ரெய்டு நடத்துவதுதான் கூட்டணி தர்மமா?” எனப் புலம்பியிருக்கிறது. “எங்கேயோ தவறு நடந்துவிட்டது. முதல்வருடைய துறை எனத் தெரியாமல் வந்திருப்பார்கள்… நான் டெல்லியோடு பேசுகிறேன்” என ஆறுதல் சொன்னாராம் அந்த டெல்லி பிரதிநிதி. ஆனாலும், “அதெப்படி முதல்வருடைய துறை எனத் தெரியாமல் இருக்கும்… எல்லாம் நாடகம்” எனக் கடும் அப்செட்டில் இருக்கிறதாம் முதல்வர் தரப்பு.
“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிமீது புகார் ஒன்று எழுந்தது. இந்தப் புகார் தற்போது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal) விசாரணைக்கு வந்திருக்கிறதாம். இதைச் சற்றும் எதிர்பாராத கமிஷனர் அலுவலக மூத்த அதிகாரி தரப்பு, இந்தப் பிரச்னை நமக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று பயப்படுகிறதாம். எனவே, ‘அந்தத் தொழிலதிபருக்கு முறையாக சம்மன் கொடுத்துத்தான் விசாரணைக்கு அழைத்தோம்.
அவரை மிரட்டிப் பணம் எதுவும் வாங்கவில்லை’ என இப்போதே ஆவணங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்களாம். ஒருவேளை இந்த விவகாரம் தன்னை நோக்கித் திரும்பினால், தன் நலம்விரும்பிகளாக வலம்வரும் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவரை பலிகடாவாக்கிவிட்டு நாம் தப்பிவிட வேண்டும் என்று பக்காவாக பிளான் போட்டிருக்கிறதாம் அந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தரப்பு. “ஐயா, பலே கில்லாடிதான்” எனக் கிசுகிசுக்கிறார்கள் கமிஷனர் அலுவலக காக்கிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.