சேவல் சண்டை மற்றும் அதனை சுற்றி நடக்கும் பண ஆட்டங்களைக் குறித்து `ஆடுகளம்’ திரைப்படம் தெளிவாக படம்பிடித்து காட்டியது.
சேவல் சண்டைக்கு பரவலாக தடை விதிக்கப்பட்டாலும், சட்ட விரோதமாகச் சேவல் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் இந்தாண்டு சங்கராந்தி பண்டிகை ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் வருகிறது. இந்த நாட்களில் சேவல் சண்டைகள் நடைபெறுவது வழக்கம்.

அதேசமயம் ஆயிரக்கணக்கான சட்டவிரோத சூதாட்ட சேவல் சண்டை அரங்கங்களும் ஆந்திர பிரதேசங்களின் உள்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கு பயிற்சி பெற்ற சேவல்கள் சாகும் வரையில் சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றன. சேவல் சண்டையைக் காணவும், பந்தயம் கட்டவும் பலரும் அப்பகுதிகளில் குவிகின்றனர்.
இருந்தபோதும் இந்தாண்டு ஆந்திராவில் உள்ள சேவல்கள் `Ranikhet’ என அழைக்கப்படும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து உள்ளன.
இதனைச் சரிசெய்ய சேவல் வளர்ப்பாளர்கள் அவைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை குறைவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் `ஷிலாஜித்’ மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். சிலர் `வயாகரா 100′ மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
குறுகிய காலத்தில் சேவல்கள் தெம்போடு சண்டையிட சேவல் வளர்ப்பாளர்கள் இப்படி செய்து வருகின்றனர். மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய மருந்துகளை இவர்கள் சேவல்களுக்கு அதிகமாக கொடுத்து வருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய மருந்துகள் உண்மையிலேயே சண்டை சேவல்களின் சண்டையிடும் உணர்வை அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
“குறுகிய காலத்திற்கு சேவல்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் சேவல்கள் முடங்கிவிடும். அதோடு இத்தகைய சேவல்களை உண்ணும்போது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பிறழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு’’ என கால்நடை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.