தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று இயற்கைக்கு இயற்கையின் விளைவால் விளைந்த உணவுக்கும் அதற்கு உற்ற துணை புரிந்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் புது வெல்லம், பச்சரிசி இட்டு புது பானையில் பொங்கலிட்டு வழிபடுவது நமது மரபாகும்.

அன்று பொங்கல் இடுவதற்காக புது பானை மற்றும் அடுப்பு வாங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. உழைக்கும் ஒரு சமூகம், பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தயாராகி, மண்பானை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
குறிப்பாக நாகை மாவட்டம் என்றாலே விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் தான் பிரதானம். எனவே பொங்கல் பண்டிகை என்பது இங்கு மிகுந்த சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதற்காக நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கீழ்வேளூர் அடுத்த இராதாமங்கலம், வடக்காலத்தூர், காக்கழனி மற்றும் கொளப்பாடு உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலுக்குத் தேவையான மண்பானை, மண் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே வயல்களில் இருந்து மண் எடுத்து வந்து, அதனை பக்குவப்படுத்தி பாண்டங்களைத் தயாரித்து, காய வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு பகலாக கனமழை கொட்டித் தீர்த்தும் பகல் பொழுதுகளில் வெயில் இல்லாமல் மேக மூட்டத்துடனேயே வானிலை காணப்படுகிறது. இதனால் தயாரித்த மண்பாண்டங்களை காய வைக்க முடியாமலும், காய்ந்த பாண்டங்களை சுட முடியாமலும் பெரும் இன்னலுக்கு ஆளாகிவிட்டார்கள். மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ள சூழ்நிலையில் இதற்கு மேல் காய வைத்து சுட்டு மண்பாண்டங்களைத் தயார் செய்ய முடியாது என்ற நிலையை எட்டி உள்ளது.

இது குறித்து கொளப்பாடு பகுதியை சேர்ந்த அமுதா அவர்களிடம் பேசுகையில், “நாங்க 20 வருடமாக மண்பானைத்தொழில் தான் செய்கிறோம் . வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது சார்” என வேதனையுடன் சொல்லத்தொடங்கினார். “நாங்க கார்த்திகை மாதத்திலேயே மண்ல கைய வைக்க ஆரம்பிச்சிட்டோம். அதுல இருந்தும் தொடர்ந்து மழை பேஞ்சுகிட்டே இருக்கு ஒன்னு விட்டு ஒரு நாளாக . வெயில் அடிக்கிற நாள் மட்டும்தான் நாங்க வேலை செஞ்சோம்.
தயார் பண்ண மண்பாண்டங்கள் ரெண்டு மணி நேரம் ஆச்சும் வெயில்ல காயணும்… அப்பதான் நல்லா இருக்கும், இல்லன்னா மண்பாண்டம் வளைந்து போய்விடும். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு ரெடி பண்ணி கொஞ்சமா தயார் பண்ணி இருக்கோம். இந்த வருஷம் மழையினால் ரொம்ப நட்டமா போச்சு. சூளையெல்லாம் தண்ணி நின்னு பாதிப்பா இருக்கு. பொங்கல் நெருங்கியதால் நேத்தியும் இன்னைக்கும் சூளையில கொஞ்சம் மண்பானை வைச்சு ரெடி பண்ணி இருக்கோம். இந்த ஊர்ல நாங்க ரெண்டு குடும்பம் தான் இந்த தொழில் பண்றோம். எங்களுக்குன்னு அரசாங்கத்தில இருந்து இதுவரைக்கு எந்த சலுகையும் கொடுக்கல. மழை நிவாரணம் கூட கொடுக்குறாங்க. ஆனா எங்களுக்கு அதுபோல எந்த சலுகையும் கிடைக்க மாட்டேங்குது.

நாங்களும் தஞ்சாவூர்ல இருக்குற மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தில பணம் எல்லாம் கொடுத்து உறுப்பினர் கார்டேல்லாம் வாங்கி வச்சிருக்கோம். எங்க மருமகளும் விதவை, அதுக்கும் உதவி செய்றேன்னு சொன்னாங்க . ஆனா இதுவரைக்கும் எதுவுமே செய்யல சார். இது சம்பந்தமா கலெக்டர் கிட்டயும் மனு கொடுக்கலாம் என்று போனோம். அங்க போனபோ சங்கத் தலைவரே எங்கள வழி மறிச்சு நான் வாங்கி தரேன் அப்படின்னு சொல்லி மனு வாங்கிட்டாரு..! ஆனா வாங்கி கொடுக்கல வந்து பணம் மட்டும் வந்து வாங்கிட்டு போறாரு… வாங்கி தரேன் வாங்கி தரேன்னு சொல்லிட்டு. சார் இந்த மண்பாண்ட தொழிலை பொறுத்த வரைக்கும் மண்ணு ரொம்ப இளகி போயிடக்கூடாது. கெட்டியாகவும் இருக்க கூடாது. மாவு பதத்துல இருக்கணும் அப்போதான் அச்சி எடுக்கிறப்போ சரியா இருக்கும் ..!ஆனா அத எடுக்க முடியாமல் வீட்டுக்காரர் ரொம்ப சிரமப்படுகிறார். வயசானதுனால ஒரு கரண்ட் திருவையாச்சும் காசு கொடுத்து வாங்கலாம்னு இருக்கிறோம் சார்” எம ஆற்றாமை தோய்ந்த கண்களுடன் கூறி முடிந்தார்.
மண்பானையின் மகத்துவத்தையும் பாரம்பர்யத்தின் பெருமைகளையும் ஊரெல்லாம் பேசும் மக்களும் அரசும், நலிந்த நிலையிலும் அப்பணியை விடாமல் செய்யும் மனிதர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.