பொள்ளாச்சி: பொள்ளச்சியில் தொடங்கிய சர்வதேச பலூன் திருவிழாவில், வானில் பறந்த 10 பிரமாண்ட வண்ண பலூன்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
தமிழகத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டம் ஆறுகள், அணைகள், அருவிகள், தேயிலை தோட்டங்கள் உள்ளடங்கிய குறிச்சி நிலமும், ஆற்றங்கரை தென்னையும், பசுமை வழியும் நெல்வயல்களையும் அடங்கிய மருத நிலங்களும் கொண்ட பகுதியாகும். இங்கு இயற்கை எழில்மிகு சுற்றுலா தலங்களாக வால்பாறை, டாப்சிலிப், கவியருவி, ஆழியாறு அணை, ஆகியன உள்ளன. இங்குள்ள சுற்றுலா தலங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் அமைப்பு இணைந்து பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.
9-வது ஆண்டாக இந்தாண்டு பலூன் திருவிழா தொடக்க விழா நேற்று (ஜன.12) மாலையும், பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று (ஜன.13) காலையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு விதமான 10 பலூன்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட பலூன் மற்றும் வாத்து, யானை, தவளை உள்ளிட்ட வடிவங்களில் அமைக்கப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றன.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘இன்று (ஜன.13) காலை 6.50 மணி முதல் பலூன் வானில் பறக்க தொடங்கியது. தரையில் இருந்து 500 அடி முதல் 1000 அடி உயரம் வரை காற்று வீசும் திசையில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் பலூன்கள் பறந்து சென்றன. 13ம் தேதி (இன்று) முதல் வரும் 16ம் தேதி வரை இரவு வரை நாள்தோறும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை பலூன் திருவிழா நடைபெறும். திடலில் 80 அடி உயரத்தில் வானில் 10 நிமிடங்கள் பலூன்கள் நிலை நிறுத்தப்படும். சுமார் 80 அடி உயரத்தில் வானில் இருந்தப்படி பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்கலாம்.
ஆண்டுதோறும் பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளனர். மேலும் காலை 10 மணி முதல் 4.30 மணி வரை ஹெலிகாப்டர் சவாரி நடத்தப்படுகிறது. அத்துடன் 14-ம் தேதி 3, 4 மற்றும் 5 கி.மீ., என மூன்று பிரிவுகளில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது. மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடிப்போர் பலூனில் பறக்க வாய்ப்பு அளிக்கப்படும்” என்றனர்.