பல் மருத்துவத்தில் மிகவும் பொதுவாக நம் காதுகளில் விழும் வார்த்தை ‘ரூட் கனால்’ சிகிச்சை (Root Canal Treatment) பாதிக்கப்பட்ட பல்லை நீக்காமல் காப்பாற்றுவதற்காக செய்யப்படும் சிகிச்சை. இந்தச் சிகிச்சையானது நவீன கால தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும் இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே வழக்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிருள்ள மனிதனுக்கு கி.மு 3500 ஆண்டுகளுக்கு முன்பாக சுமேரியர்கள் இந்தச் சிகிச்சையைச் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.

கூர்மையான கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தி பல்லை நீக்குவதற்காக பல்லில் வேர்வரை செல்லும் இந்தச் சிகிச்சையை சுமேரியர்கள் செய்துள்ளனர். கி.மு 600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இத்தாலியர்கள் மத்தியிலும் இந்தச் சிகிச்சை பிரபலமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பல்லில் துளையிட்டு பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கிவிட்டு, அந்தப் பகுதியில் தேன் மெழுகை வைத்துப் பூசியுள்ளனர் என்கிறது வரலாறு.
முன்பெல்லாம் பல் வலி என்றால் பல்லில் உள்ள சொத்தையை நீக்கிவிட்டு பல்லை அடைப்பது அல்லது பல்லை நீக்கிவிடுவது ஆகிய இரண்டு சிகிச்சைகள்தான் இருந்தன. ஆனால் தற்போது ரூட் கனால் சிகிச்சையைப் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தச் சிகிச்சை அவசியமானதா, யாரெல்லாம் இதைச் செய்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா.

பல் சொத்தையின் காரணமாக பல்லின் மேல் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டால் அல்லது உடைந்துவிட்டால், பல் பாதிக்கப்பட்டு வேர்ப்பகுதி மட்டும்தான் இருக்கிறது என்றால் பல் எடுப்பதைப் பரிந்துரைப்போம். சிலருக்கு அந்த நிலையில்கூட பற்களைக் காப்பாற்ற முடியும். இது நபருக்கு நபர் வேறுபடும்.ஈறு பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விடுவதால், பல் பாதிக்கப்பட்டு ஆடத்தொடங்கிவிடும்.
அந்தப் பல் நிற்பதற்கான பிடிமானம் இல்லாமல் எலும்பு தேய்ந்துபோய்விடும். இதுபோன்ற நிலையில் அந்தப் பல்லைக் காப்பாற்ற முடியாது என்பதால் அதை நீக்கிவிடுவோம். இதுபோன்ற தீவிரமான நிலைகளில் மட்டும்தான் பற்களை நீக்குவதைப் பரிந்துரைப்போம். இல்லாத பட்சத்தில் அதைப் பாதுகாப்பதற்கான சிகிச்சையைத்தான் பரிந்துரைப்போம்.

பல் எடுக்காமல் ‘ரூட் கனால்’ எனப்படும் வேர் சிகிச்சை செய்து பல்லைக் காப்பாற்றுவோம். வேர் சிகிச்சை செய்வதற்குப் பதில் பற்களை நீக்கிவிடுவது சிறந்த முடிவாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. செயற்கைப் பற்கள் பொருத்துவதற்கான தொழில்நுட்பம் எத்தனையோ வந்துவிட்டன. இருந்தாலும் இயற்கையான பல்லைப் போன்று வராது. எனவே, இயன்றவரை சிகிச்சை செய்து அவற்றைக் காப்பாற்றுவதற்குதான் முயற்சிக்க வேண்டும்.
ரூட் கனால் செய்ய வேண்டும் என்றால் பல்லின் வேர்ப்பகுதி எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். வேர்ப்பகுதி தாடையின் உள்ளே இருப்பதால் கண்களால் அவற்றைப் பார்க்க முடியாது. எனவே, எக்ஸ்ரே எடுத்து பல்லின் வேர் எவ்வளவு உயரமாக, ஆழமாக இருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தூரத்துக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது உள்ளிட்டவற்றை பல் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.
அதன் அடிப்படையில் ரூட் கனால் சிகிச்சை மேற்கொள்ளப்படும். வேர்ப்பகுதியிலிருந்து பல்லின் மேற்பகுதி வரை செய்யப்படும் ஒரு வகையான அடைப்பு (Filling) சிகிச்சைதான் ரூட் கனால் என்று கூறப்படுகிறது. சிகிச்சையின்போது அந்தப் பகுதியிலிருக்கும் ரத்த ஓட்டம் அல்லது நரம்புப் பகுதி குறிப்பிட்ட அளவு தடுக்கப்படும். இதனால் பல்லின் வலிமை சற்று குறைந்துவிடும். எனவே தான் சிசிச்சைக்குப் பிறகு பல்லை பலப்படுத்துவதற்கு அதன் மீது தொப்பி (Cap) போன்ற ஓர் அமைப்பை பொருத்த வேண்டும்.
யாருக்கெல்லாம் ரூட் கனால் சிகிச்சை தேவைப்படலாம்?
* தீராத வலி: பற்களில் அசௌகர்யத்தை உணர்தல், தீராத பல் வலி, தாடை, முகம், பிற பற்களிலும் வலி இருந்தால்
* பல் கூச்சம்: சூடாக அல்லது குளிர்ச்சியாக எதையாவது குடித்தால் அல்லது சூடாகக் குடித்தாலும் குளிர்ச்சியாகக் குடித்தாலும் பற்களில் கூச்சம் ஏற்பட்டால், அந்த அசௌகர்யம் சில விநாடிகளுக்கு மேல் நீடித்தால்

* ஈறுகள், தாடைப் பகுதியில் வீக்கம்: பல்லில் நோய்த்தொற்று ஏற்பட்டு, சுற்றுப்பகுதியில் சீழ் கோத்திருப்பதால் ஈறுகளில், தாடைப்பகுதியில் வீக்கம் ஏற்படும்போது
* பல்லின் நிறம் மாறுதல்: பல்லில் நோய்த்தொற்று ஏற்பட்டு அதன் உள்ளில் இருக்கும் திசுப்பகுதியையும் (Pulp) அது பாதித்து, அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது பல்லின் நிறம் மாறும்போது
* ஈறுகளில் வலி: அழுத்தம் கொடுத்து பல்லை அழுத்தும்போது பற்களில் அசௌகர்யம், வலி ஏற்படும்போது. பற்களின் திசுக்கள் இருக்கும் பகுதியிலுள்ள நரம்புகள் காயமடைந்திருப்பதை இது உணர்த்தலாம்.
* பல் உடைந்திருந்தால்: விளையாடும்போதோ, விபத்தின்போது பல் உடைந்தாலோ, கீறல் விழுந்தாலோ.
* ஆடும் பல்: நோய்த்தொற்றின் காரணமாக பற்களிலிருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். இதனால் அப்பகுதியிலிருக்கும் எலும்பு மென்மையாகி பல் ஆடத் தொங்கும்போது.
இவை பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் மாறலாம், இதை தவிர வேறு அறிகுறிகளும் தோன்றலாம். எனவே, ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவரை அணுக வேண்டும்” என்றார்.

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.