என் காதல்… : பிரியமான பிரியங்கா மோகன் பேட்டி

''மெழுகு டாலு நீ… அழகு ஸ்கூலு நீ…'' என ரசிகர்களின் நெஞ்சில் புகுந்து முணுமுணுக்க வைத்தவர் அழகு தேவதை பிரியங்கா மோகன். அப்பா தமிழ்நாடு, அம்மா கர்நாடகா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில். கன்னடம், தெலுங்கு சினிமாவில் நடித்த பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, அவர்களின் மனங்களில் பிரியாத பிரியமாகிப்போனார் பிரியங்கா மோகன். தித்திக்கும் பொங்கல் மலர் ஸ்பெஷலாக அவர் அளித்த 'ஸ்வீட்' பேட்டி…

சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் – இவர்களுடன் நடித்துள்ளீர்கள்… யார் பெஸ்ட் நடிகர்
மூணு பேரும் பெரிய ஸ்டார் நடிகர்கள். ஒருத்தர சொன்னா மற்றவங்க கோபமாவங்க.

சிவகார்த்திகேயன் கூட இரண்டு படம்… எதிர்பார்த்தீங்களா
நான் எதிர்பார்க்கல. 'டாக்டர்' படம் நடிக்கும் போதே 'டான்' படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குனர் சிபி முடிவு செய்தார். தொடர்ந்து சிவாவுடன் 2 படம் வருமேன்னு சிலர் யோசிச்சாங்க. ஆனா 'டான்' படத்தில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என்று சிபி கூறிவிட்டார்.

அனிருத், ஜீ.வி. பிரகாஷ் – பிடித்தது யார் பாட்டு
இருவருக்கும் தனித் தனி ஸ்டைல். இரண்டு பேர் இசையிலும் நடித்தது சந்தோஷம்.

தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை
கடவுள் ஆசியால் எனக்கு நிறைய படங்கள் தமிழில் வருகிறது. வந்த படத்தில் எந்த கதை பிடிச்சிருக்கோ எந்த கேரக்டர் எனக்கு சரி ஆகுமோ அந்த மாதிரி கதைகளில் நடிக்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்.

நடிப்பு தவிர சினிமாவில் வேற எந்த துறையில் ஆசை இருக்கு
இயக்கத்தில் ஆசை இருக்கு. அதே சமயம் ஒளிப்பதிவும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்போதைக்கு நடிப்பு மட்டுமே.

சினிமாவிற்கு வரும் புதியவர்களுக்கு சொல்ல விரும்புவது
சினிமாவுக்கு வர ஆசை இருக்கும். ஆனால் பொறுமை முக்கியம். எந்த ரோல், எந்த படம் என, நமக்கு முதலில் பிடிக்குதான்னு பார்த்து ஒரு முடிவை எடுக்கணும்.

யாரையேனும் காதலிக்கிறீர்களா
இப்போ சினிமா மீது தான் காதல்! நிறைய படங்கள் நடிக்கணும். திருமணம், கண்டிப்பாக சொல்லிட்டு தான் செய்வேன்

கிளாமர் ரோல்…
எனக்கு ஒரு எல்லை வைத்துள்ளேன். அதுக்கு மேல என்னால் முடியாது. வெறும் உடலை, தோலை காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை

அடுத்தடுத்த படங்கள்
பொங்கல் திருநாளில் முதல் முறையாக என் படம், 'கேப்டன் மில்லர்' வெளியாவது மகிழ்ச்சி. முதல் முறையாக இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். அம்பாசமுத்திரம், குற்றாலம், மதுரையில் படப்பிடிப்பு நடந்தது. தனுஷ் உட்பட பலரும் அந்த ஊர் பெண்ணைப் போல நான் இருப்பதாக சொன்னார்கள். அடுத்து தெலுங்கில் பவனுடன் ஒரு படம், நானி உடன் ஒரு படம். ஜெயம் ரவியுடன் 'பிரதர்' என்ற படம் முடிந்து விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.