“தமிழகத்தில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” – ஆளுநர் எக்ஸ் தள பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை

சென்னை: “தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்து அவரை சனாதனத் துறவி என்று தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆளுநர் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.