டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவாவில் இருந்து டெல்லி புறப்படவேண்டிய விமானம், மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. கோவாவில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்படவேண்டிய விமானம், 12 மணி நேரம் தாமதமாக இரவு 10:06 மணிக்குத்தான் புறப்பட்டது. அதுவும் டெல்லிக்கு செல்லாமல் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. மும்பைக்கு இரவு 11:10-க்கு வந்து சேர்ந்தது. பயணிகளிடம் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினஸ் கட்டடத்தில் சென்று இருக்கும்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். விமானத்துடன் ஏணி இணைக்கப்பட்டவுடன் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி, அங்கேயே நின்று கொண்டிருந்தனர். சிலர் விமானத்தில் இருந்தனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது விமானத்திற்கு அருகில் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டனர்.

அந்த இடத்தில் பயணிகளுக்கு அதிகமாக அனுமதி கிடையாது. விமானங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியாகும். ஏற்கெனவே விமானம் கோவாவில் இருந்து தாமதமாக புறப்பட்டது. அதோடு மீண்டும் மும்பையில் தாமதமானதால், பயணிகள் மேலும் கோபமடைந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அதில் சில பயணிகள் தரையில் அமர்ந்து தங்களிடம் இருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தனர். விமான நிலைய ஊழியர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. அதிகாலை 1 மணிக்கு பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அதை, சில பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அதனை அன்சிட் சயால் என்ற பயணி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. பயணிகள், விமானத்தின் முன்வாசல் பக்கத்தின் கீழே அமர்ந்துகொண்டு, மொபைல் போனை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவர்கள் அருகில் மரக்கட்டை, தண்ணீர் பாட்டில்கள் கிடந்தது. வெறும் 6 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் மும்பை விமான நிலைய நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஒரே நாளில் விளக்கம் அளிக்கும்படி, அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை விமான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், `விமானம் தாமதமாயானதால் பயணிகள் கோபத்தில் இருந்தனர். அவர்கள் அங்கிருந்து நகர மறுத்தனர். எனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் துணையோடு அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பயணிகள் முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்புதான் டெல்லியில் இருந்து கோவா சென்ற விமானம் தாமதமானதால், பயணி ஒருவர் பைலட்டை தாக்கினார்.