“பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுப்பு” – முதல்வர் ஸ்டாலின் @ சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி

சென்னை: “40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் சமூக வலைதளப்பதிவு: தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.