பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டால் விழாக்கோலம் பூண்ட மதுரை: அவனியாபுரத்தில் களம்காணும் 1,000 காளைகள்

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் மொத்தம் 6 ஆயிரம் காளைகளை அவிழ்த்துவிட மாவட்ட நிர்வாகத்தால் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. நாளை(ஜன.16) பாலமேடு, நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காளைகளும், 4,514 வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். இந்தக் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தகுதிச் சான்று வழங்கினர்.

அந்த சான்றுகளுடன்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க மொத்தம் 6 ஆயிரம் காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கியுள்ளனர்.

அதன்படி, இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர். இதையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில், எஸ்.பி.க்கள் பிரவீன் உமேஷ் (மதுரை),சிவபிரசாத் (தேனி) மற்றும் டிஐஜி ரம்யா பாரதி ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சிசிடிவி கண்காணிப்பு, ஆம்புலன்ஸ்கள், தற்காலிக அவசர சிகிச்சை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், நடமாடும்கழிப்பறை மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று போட்டிகளிலும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் தலா ஒரு கார் என்ற அடிப்படையில் மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

மேலும், இரண்டாம் பரிசாக கார், கன்றுடன் கூடிய நாட்டுப் பசு, தங்கக் காசு, பைக், ஃப்ரிட்ஜ், வாஷிங்மிஷின், மிக்ஸி, சைக்கிள், பட்டுச் சேலை உட்பட பல கோடிமதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஒவ்வொரு காளைக்கும் நிச்சயம் பரிசு உண்டு.

இந்நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை நேற்று பார்வையிட்டனர்.

வாடிவாசலுக்கு புதிய கதவு: அமைச்சர் பி.மூர்த்தி கூறும்போது, ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600 முதல் 700 காளைகள்தான் அவிழ்க்கப்படும். இந்த முறை 1,000 காளைகளை அவிழ்க்கத் திட்டமிட்டுளோம்.

அதற்காகவே பிரத்தியேக பக்கவாட்டில் தள்ளும் (sliding door) வாடிவாசல் கதவு பொருத்தி உள்ளோம்.

வாடிவாசல் முன்பு அகலமாக இருக்கும். அதனால் மாடுகள் சுற்றித் திரும்பிச் செல்லும். காளைகளை அவிழ்க்க தாமதமாகும். தற்போது பொருத்தப்பட்டுள்ள புதிய கதவு, மாடு வருவதற்கான அளவிலேயே உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு விண்ணப்பித்த காளைகளில் 1,000 காளைகள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.