Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தொலைந்துபோன உறக்கம்… சரிசெய்ய  வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: எனக்கு 48 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக எனக்கு இரவுத் தூக்கம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாதி உறக்கத்தில் விழித்துக்கொள்கிறேன். அதன்பிறகு தூங்க முடிவதில்லை. இதை சரிசெய்ய ஏதேனும் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

இந்தப் பிரச்னையை ‘இன்சோம்னியா’ (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60 சதவிகிதப் பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்தக் காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது. சிலருக்கு தூக்கத்தைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும்.

இன்னும் சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்துவிடும். மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே மெனோபாஸ் காலகட்டத்தில் சகஜமாக ஏற்படுபவை என்கின்றன ஆய்வுகள்.

ஒரு வருட காலத்துக்கு பீரியட்ஸே வராமலிருந்தால் அதை மெனோபாஸ் என்கிறோம்.  மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸ் காலகட்டத்திலேயே நம் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடலளவிலும் உளவியல்ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதும் நடக்கும். 

ஹார்மோன் சமச்சீரின்மை

ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் உடல் சூடாவது, அதிகம் வியர்த்துக் கொட்டுவது போன்ற உணர்வுகள் சகஜமாக இருக்கும். உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்த்துக்கொட்டுவது போல உணர்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்போர் எல்லாம் குளிர்ச்சியாக உணர்ந்தாலும் உங்களுக்கு மட்டும் வியர்த்துக்கொட்டும். அதேபோல  ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவுகள் ரொம்பவும் குறைவதால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கும்.  

வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகக்கூட தூக்கம் பாதிக்கப்படலாம். அப்படி எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதைப் பரிந்துரைத்த மருத்துவரிடம் அது குறித்து ஆலோசனை பெறுங்கள்.

தூக்கமின்மையில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சில வாரங்கள் நீடிக்கும், பிறகு தானாக சரியாகிவிடும். இன்னொரு வகை க்ரானிக் இன்சோம்னியா. இது நீண்டகாலமாகத் தொடரும். மூன்று மாதங்களுக்கு மேலும் தொடரும். 

தூக்கமின்மை

இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் வேளையில் தூக்கம் வருவதாக உணர்வார்கள். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

தூக்கமின்மை பிரச்னைக்கான முதல் தீர்வு ‘காக்னிட்டிவ் பிஹேவியரைல் தெரபி’. அதாவது நமக்கு ஏதேனும் நெகட்டிவ் சிந்தனைகள் உள்ளனவா, அவை நம் தூக்கத்தை பாதிக்கின்றனவா என பார்த்து அவற்றை சமாளிக்க கற்றுத்தரப்படும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அது பழக்கமாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

மருந்துகள்

அந்த மாதிரி மருந்துகளைத் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையோடு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் எடுப்பது பெரிய அளவில் உதவும். மேற்குறிப்பிட்ட எந்த விஷயமும் உதவவில்லை என்றால் உங்களுடைய தூக்க ரொட்டீனை பார்க்க வேண்டும். தூக்கவியல் மருத்துவரை அணுகினால் அவர் அது தொடர்பான கேள்விகளைக் கேட்டு பிரச்னைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைச் சரிசெய்ய வேண்டியதும் அவசியம். முதல் விஷயம் நாம் தூங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாலை நேரத்தில் மங்கலான விளக்குகளையே பயன்படுத்துங்கள். செல்போன், லேப்டாப் போன்றவற்றின் உபயோகத்தைத் தவிர்க்கவும். யோகா, தியானம் போன்ற ரிலாக்ஸிங் டெக்னிக்குகளை பின்பற்றலாம்.

தூக்கம்

தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். மிதமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதற்குத் தயாராக வேண்டும். நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் அவற்றைப் போக்க நிபுணர்களின் உதவியை நாடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.