புதுடெல்லி: மக்களவையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அரசு எஸ்டேட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் அப்போது திரிணமூல் எம்.பி., மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்ற மக்களவை மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன.7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.
மஹுவா தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், அவர் ஏன் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்று மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி ஜன.8-ஆம் தேதி எஸ்டேட் இயக்குநரகம் மீண்டும் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.தொடர்ந்து 12-ஆம் தேதி மற்றொரு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதனிடையே அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜன.4ம் தேதி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவது தொடர்பாக எஸ்டேட் இயங்குநரகத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மஹுவாவுக்கு அறிவுறுத்தியது.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்கு உறுப்பினர்கள் பங்களாவில் தங்க வைக்க விதிகள் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கின்றன” என்றார். மேலும் மஹுவாவின் மனுவினை திரும்பப் பெறுவதற்கு அனுமதி அளித்த நீதிபதி, “இந்த விவகாரத்தில் எந்த அவதானிப்பும் செய்யவில்லை என்றும், மஹுவா கோரிக்கை மனு தாக்கல் செய்ய பின்பு அதன் மீது எஸ்டேட் இயக்குநரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம்.
பங்களவாவில் குடியிருப்பவர்களை அங்கிருந்து காலி செய்வதற்கு முன்பு முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துவதாகவும், மனுதாரரை பங்களாவில் இருந்து வெளியேற்றும் போது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு கடைபிடிக்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.