`புதுச்சேரியில் கூட்டணி தொடர்கிறதா?’ – சமத்துவப் பொங்கலால் பொங்கிய திமுக; கொதித்த காங்கிரஸ்

புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சி அப்போது ஆட்சியில் இருந்தது. அதேசமயம் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க 6 தொகுதிகளில் வெற்றிப்பெற்றதுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடித்த நிலையில், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-வுக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியைவிட அதிக இடங்களில் வெற்றிப்பெற்ற தி.மு.க, புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமையேற்போம் என்று கூறி வருகிறது. தி.மு.க-வின் இந்த நிலைப்பாடு, காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலூட்டி வருகிறது.

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

 இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக எம்.பி வைத்திலிங்கத்தை நியமித்தது கட்சித் தலைமை. அதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எம்.பி வைத்திலிங்கம். இந்த நிலையில் நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து நடத்திய நல்லிணக்க, சமத்துவ பொங்கல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை உருளையன்பேட்டை பள்ளிவாசல் வீதியில் நடந்தது. அந்த விழாவுக்கு உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் அடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழில், எம்.எல்.ஏ நேரு பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட எம்.பி வைத்திலிங்கமும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், எம்.எல்.ஏ நேருவை புகழ்ந்து தள்ளினர்.

அதுதான் தற்போது தி.மு.க கொந்தளிப்புக்கான காரணம். எம்.எல்.ஏ நேருவும், எதிர்கட்சித் தலைவர் சிவாவும் அரசியலில் நேரெதிர் துருவங்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும், தி.மு.க-வின் மாநில அமைப்பாளர் சிவா, உருளையன்பேட்டை தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு, 4 முறை வெற்றிப் பெற்றவர். அந்த உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் களமிறங்கத் தயாரானார் நேரு. அவரால் தன்னுடைய வெற்றி பாதிக்கப்படும் என்பதால், சொந்த தொகுதியான உருளையன்பேட்டையை விட்டுவிட்டு, வில்லியனூர் தொகுதிக்கு இடம் பெயர்ந்தார் சிவா. அதேசமயம் உருளையன்பேட்டை தொகுதியையும் விட்டு விடக்கூடாது என்று முடிவெடுத்த சிவா, தனக்கு நெருக்கமான கோபாலை அங்கு போட்டியிட வைத்தார். ஆனால் அங்கு சுயேச்சையாக போட்டியிட்ட நேரு, கோபாலை தோற்கடித்தார். ஆனாலும் சொந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சிவா.

காங்கிரஸ் சமத்துவ பொங்கல் விழா பேனரில் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு

இந்த சூழலில்தான் சமத்துவ பொங்கல் விழாவுக்கு நேரு எம்.எல்.ஏ-வை காங்கிரஸ் அழைத்த விவகாரம் தி.மு.க-வை சூடேற்றியிருக்கிறது. புதுச்சேரி தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு, திருவள்ளுவர் தினம் மற்றும் தை பொங்கல் விழாவில் அது எதிரொலித்தது. அந்த விழாவில் எதிர்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில், பேசிய முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி, தி.மு.க துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன் உள்ளிட்டவர்கள், “தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்பதை புதுவை காங்கிரஸார் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் புதுவை தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்றனர் ஆவேசமாக. அத்துடன் காங்கிரஸ் கட்சியையும், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர்களைத் தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, “பிரதமரின் ஆலோசகரைப் போல இருந்தவருக்கும், முதலமைச்சராக இருந்தவருக்கும் அட்வைஸ் கூற முடியாது. (முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரஒ குறிப்பிட்டதாக சொல்கிறார்கள்). அவர்களின் தற்போதைய நிலைப்பாடு, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் துடுப்பு போன்றது. துடுப்பை பிடித்திருப்பவர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று எங்கள் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமுமில்லை. அதனால் எங்கள் தலைவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல நிலைப்பாடு இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் சில தலைவர்கள் நம்மை விரும்பவில்லை. கடந்த 27 ஆண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க ஆட்சியில் இல்லை என்றாலும், கட்சியை கொள்கையுடன் நடத்துகிறது. அவர்களுக்கு (காங்கிரஸ்) என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்ததில் வருத்தமே இல்லை. மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 4 தி.மு.க வேட்பாளர்கள் வெற்றியை இழந்திருக்கிறார்கள். அதனால் தி.மு.க-வில் 12 பேர் பலத்துடன் இருக்கிறார்கள் என்பது அவர்கள் கணக்கு. அதனால் புதுச்சேரியில் கூட்டணியை  முறிக்க இரண்டு தலைவர்கள் உள்விளையாட்டு விளையாடி வருகின்றனர்” என்றார் காட்டமாக.

எம்.பி வைத்திலிங்கம் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “நாங்கள் நடத்தியது சமத்துவ பொங்கல் விழா. அதனடிப்படையில் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையிலும், ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் என்ற முறையிலும் எம்.எல்.ஏ நேருவை அழைத்திருந்தோம். இதிலென்ன தவறு இருக்கிறது ? இவர்கள் மட்டும் யோக்கியமா ? கூட்டணி தர்மம் குறித்துப் பேசும் தி.மு.க, வில்லியனூரில் எங்கள் கட்சியின் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஷாஜகானை ஏன் தி.மு.க-வில் சேர்த்தார்கள் ? அது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் இல்லையா ? அதேபோல மணவெளி காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவராக இருந்த சன்.சண்முகத்தை இழுத்து, பொதுக்குழு உறுப்பினர் பதவியை கொடுத்தது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் இல்லையா ? ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லையே ? சமத்துவ பொங்கல் வைத்ததற்கும், கூட்டணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? தவிர கூட்டணி குறித்து, இரு தலைமையும்தான் முடிவெடுக்க முடியுமே தவிர நாங்கள் இல்லை” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.