நம்பிக்கைதான் வாழ்க்கை. அதுவும் தெய்வ நம்பிக்கை நம்மை எப்போதும் தாங்கி நிற்கும். ‘when god is for us; who can be against us’ என்ற வரியை நாம் அனைவரும் படித்திருப்போம்.
நம்மை எத்தனை பேர் எதிர்த்துவந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையே வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளப் போதுமானது. இதற்குப் பல உதாரணக் கதைகளை நாம் சொல்லக் கேட்டிருப்போம்.அப்படி ஒரு சம்பவம் பிக்பாஸ் சீசன் 7 ல் நடைபெற்றுள்ளது. அர்ச்சனா வைல்ட் கார்ட் கன்டஸ்டன்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றபோது அவர் பெரும்பாலானவர்களால் எதிர்க்கப்பட்டார். யார் எது சொன்னாலும் உடைந்துபோய் அழுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அழுகையே அவர் அடையாளமாக இருந்தது. ஆர்ஜே பிராவோ எவிக்ட் ஆகி வெளியே போகும்போது தன் வசம் இருந்த சிறு ஜபமாலை பிரேஸ்லெட்டை அர்ச்சனாவிடம் கொடுத்து, ‘இது மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் வாங்கியது. இதை வைத்துக்கொள்’ என்று சொல்லிக் கொடுத்துச் சென்றார்.

அர்ச்சனா அதை நம்பியிருக்கிறார். அந்த ஜபமாலையைக் கையிலேயே வைத்திருந்தார். அதன்பிறகு அர்ச்சனாவின் ஆட்டமே மாறிவிட்டது. பூனைபோல் அனைத்துக்கும் பதுங்கிப் பதுங்கித் திரிந்த அர்ச்சனா புலிபோல சீற ஆரம்பித்தார். அந்த ஜபமாலையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் புல்லி கேங் என்று அழைக்கப்பட்ட மாயா குழுவினரைத் தனியாளாக எதிர்கொண்டபோது பார்வையாளர்கள் வியந்துபோனார்கள்.
அதன்பிறகும் அர்ச்சனா தொடர்ந்து தன் ஆவேசமான ஆட்டத்தைக் காட்டினார். கடைசி நாள் வரை ஹவுஸ்மேட்ஸ் அவரை ஒதுக்கியபோதும் கிண்டல் செய்தபோதும் தளராமல் விளையாடிக் கோப்பையை வென்றார். போட்டியின் கடைசி வாரத்தில் எவிக்ட் ஆன அனைத்து வீரர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அப்போது பிராவோ ரகசியத்தை உடைத்தார். ‘தான் தந்த மாலை பத்துமலை முருகன் கோயிலில் வாங்கியது அல்ல. ஆனால் அது உன் தைரியத்தை எப்படி உயர்த்தியது பார்த்தாயா’ என்று கேட்டார். அதே நேரம் அந்த பிரேஸ்லெட் தந்த பாஸிடிட்டிவிட்டிதான் அர்ச்சனாவைத் தாங்கிப்பிடித்தது என்பதை மறுக்கமுடியாது.

ஆட்ட மும்மரத்தில் பலரும் இதை எளிதாகக் கடந்து சென்றனர். ஆனால் அதன் பின் இயங்கிய உளவியலும் ஆன்மிக நம்பிக்கையும் சாதாரணமானது அல்லது. அர்ச்சனா உண்மையிலேயே அதை நம்பினார். நம்பிக்கையை ஊன்றுகோலாகக் கொண்டு தைரியமாக எதிர்கொண்டார். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கே இறைவனின் அருளும் இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

முருகனின் கோயிலில் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பொருளே ஒருவருக்குள் மிகுந்த மாற்றத்தையும் துணிவையும் வெற்றியையும் கொண்டுவரும் என்றால் முருகனை மனமாற வழிபட்டால் வாழ்வில் எப்போதும் வெற்றி தான் என்னும் நம் முன்னோர்களின் சொற்களில் சந்தேகமே இல்லை.