டாவோஸ், ”மருத்துவம், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை இந்தியாவின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் இருந்து உலக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்,” என, பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச வளர்ச்சிக்கான தலைவர் கிறிஸ்டோபர் இலியாஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்ற பிரபல தொழிலதிபர் பில் கேட்சின், பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் சர்வதேச வளர்ச்சிக்கான தலைவர் கிறிஸ்டோபர் இலியாஸ் கூறியுள்ளதாவது:
எங்களுடைய அறக்கட்டளை, உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுடனான தொடர்பு, 20 ஆண்டுக்கு மேலானது. சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, டிஜிட்டல் கட்டமைப்பு என, பல துறைகளில் ஈடுபட்டுஉள்ளோம்.
உத்தர பிரதேசம், பீஹார், ஒடிசா என, பல மாநிலங்களிலும் இயங்கி வருகிறோம். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
இந்த துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியா எவ்வாறு வேகமாக முன்னேறியது என்பது பிரமிப்பாக உள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எனப்படும் அடையாள அட்டை, ரொக்கமில்லா பண பரிவர்த்தனை என, அசாத்திய வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்த வெற்றியை, உலக நாடுகள் கற்க வேண்டும். அதை எவ்வாறு தங்களுடைய நாட்டில் செயல்படுத்துவது என்பதை ஆராய வேண்டும். இதன் வாயிலாக அந்த நாடுகளும் வளர்ச்சியை பெறும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல நல்ல வாய்ப்புகளை நமக்கு உருவாக்கி தருகிறது. அதே நேரத்தில் இதில் சில பிரச்னைகளும் உள்ளன.
அதனால், பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும், மனிதகுலத்துக்கு பயன் தரும் வகையில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்