பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் பிராணப் பிரதிஷ்டையை ஒட்டிப் பல்வேறு மாநிலங்களுக்குப் புனித யாத்திரை சென்று வருகிறார். ராமாயணத்தோடு பல விதங்களில் தொடர்பு கொண்ட தமிழகத்திலும் இன்று முதல் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் பல்வேறு முக்கிய கோயில்களுக்குப் பயணம் செய்து வழிபாடு செய்ய இருக்கிறார்.
நாளை காலை 11 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பிரதமர் பங்கேற்கிறார். பிறகு கம்பராமாயணத்தின் பாடல்களைப் பல்வேறு அறிஞர்கள் பாராயணம் செய்வதையும் பிரதமர் கேட்கவுள்ளார்.

நாளை ஜனவரி 20 பிற்பகல் 2 மணியளவில் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர், அங்கு ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபாடு மற்றும் பூஜைகள் செய்கிறார். பிறகு அங்கும் ஸ்ரீராமாயண பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை மாலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் பஜனை சந்தியா நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
பத்ரிநாத், துவாரகா, பூரி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு திருத்தலங்களும் சார் தாம் என்று போற்றப்பட்டு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஜோதிர்லிங்கம் ஸ்ரீராமநாதரே என்பதும் மேலும் விசேஷம். மற்ற 11 ஜோதிர்லிங்கங்கள் ஆந்திராவிலும் வடக்கிலும் உள்ளன. இரவு ராமேஸ்வரம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் தங்குகிறார்.


நாளை மறுநாள் ஜனவரி 21 அன்று தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் பிரதமர் வழிபாடு செய்கிறார். பிறகு தனுஷ்கோடிக்கு அருகில், ஸ்ரீராமர் சேதுபாலம் கட்டிய அரிச்சல் முனைக்கும் யாத்திரையாகச் செல்கிறார். இங்கு தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனையின் சிறப்புகளை அறிவோம்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள சிறிய கடற்கரை கிராமம் தனுஷ்கோடி. இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இந்தப் பகுதியிலிருந்து இலங்கை 15 கிமீ தூரத்தில் வங்காள விரிகுடாக் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது.
வில்லைப் போன்று வளைந்த கடற்கரை என்பதால் இது தனுஷ்கோடி ஆனது. ஸ்ரீராமர் வில்லை வைத்த இடம் என்பதாலும் இது தனுஷ்கோடி என்றானதாம். மேலும் கோடி என்றால் முனை, வானைத் தொடும் முனையாக இப்பகுதிக் கடல் இருப்பதால் தனுஷ்கோடி என்றும் சொல்லலாம். இருபுறமும் வங்காள விரிகுடா, மன்னார் விரிகுடாவுக்கு இடையே கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடியின் அழகைச் சொல்லி மாளாது. ஒரு காலத்தில் ராமேஸ்வரத்தைவிடச் சிறந்த நகரமாக விளங்கிய தனுஷ்கோடி 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் அழிந்துபோனது. சிதைந்துபோன அடையாளங்களோடு தனுஷ்கோடி இருந்தாலும் அதன் புராணப் பெருமைகள் இன்றும் நீங்காமல் இருக்கின்றன.

ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி முனைக்கு செல்லும் வழியில் 12 கி.மீ தொலைவில் ஸ்ரீகோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீராமரை விபீஷணர் சரண் அடைந்தார் எனப்படுகிறது. மேலும் விபீஷணனுக்கு இலங்கையின் மன்னராக இங்கு வைத்துத்துதான் ஸ்ரீராமர் பட்டம் சூட்டி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் ராமேஸ்வரம் கோயிலிலிருந்து ஶ்ரீராமர் எழுந்தருளிக் கோதண்டராமர் கோயில் வந்து விபிஷணருக்குப் பட்டம் சூட்டி வைக்கும் வைபவம் இன்றளவும் நடந்து வருகிறது. அப்போது ஸ்ரீராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி, விபீஷணருக்குப் பரிவட்டம் கட்டி அருளுவார்.

இந்தக் கோயில் விபீஷணர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கு ராமபிரான் அருகில் விபீஷணர் வணங்கியபடி இருக்கிறார். ராமேஸ்வரம் வருபவர்கள் இங்கு வந்து வழிபட வேண்டும் என்பது ஐதிகம்.
தனுஷ்கோடியின் தென்முனைப் பகுதியே அரிச்சல்முனை. ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் நந்தியும் உள்ள ஒரு சிறிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சீதா சமேத ராமரும், லட்சுமணரும், அனுமனும் உடன் அருளுகிறார்கள். அரிச்சல்முனைப் பகுதியில் இருந்தே ஸ்ரீராமர் இலங்கையின் மன்னார் பகுதிக்கு சேது பாலம் கட்டத் திட்டமிட்டார் எனப்படுகிறது.
இப்பாலம் குறித்து வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீராமர் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல, நளன் என்பவரின் வழிகாட்டலில், வானர சேனை கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் திருநாமம் எழுதப்பட்ட மிதக்கும் கற்களால் இந்தப் பாலம் கட்டப்பட்டதாம்.

அனுமன் தலைமையிலான வானர சேனைகளும் ஸ்ரீராம லட்சுமணர்களும் இலங்கையை சென்றடைய இந்தப் பாலம் உதவியதால் தனுஷ்கோடியும் அரிச்சல்முனையும் ஸ்ரீராம காவியத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளன எனலாம்.
அயோத்தியில் பிறந்த ஸ்ரீராமபிரானின் திருவடிகள் பட்ட இடங்கள் ராமேஸ்வரத்தில் அநேகம் உள்ளன. ராமேஸ்வரத்தில் எங்கு நோக்கினாலும் ஸ்ரீராமரும் அவரது சேனைகளும் சம்பந்தப்பட்ட இடங்களே காட்சி தரும். அயோத்தியின் சிவலிங்கம் ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், ராமேஸ்வரத்தின் புனித தீர்த்தம் அயோத்தி சென்றதும் ராமாயண காலத்திலேயே நடந்துள்ளது என்பது ஆன்றோர்களின் கூற்று.