மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கமல்ஹாசன், ஆர்.கே. செல்வமணி, கலைப்புலி தாணு என நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு விஜயகாந்த் குறித்த தங்களின் நினைவுகளைப் பேசிவருகின்றனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் கமல், “பல விமர்சனத்தையும் அவமானத்தையும் அவர் சந்தித்திருக்கிறார். அவர் பட்ட அவமானங்களைப் பிறர் சந்திக்கக்கூடாது என நினைத்தார். அவர் கொடுப்பது பிறருக்குத் தெரியாது. எனக்கு அவரிடம் பிடித்த குணங்களில் ஒன்று, அவரின் நியாயமான கோபம். Good bye Captain!” என்றார்.
இதையடுத்து பேசிய நடிகர் ஜெயம் ரவி, “எல்லோரும் இறந்த பிறகு சிலரை மட்டும் கடவுள்னு சொல்வாங்க. ஆனா, ஒருத்தர்தான் வாழும் போதே கடவுளாக இருந்திருக்கிறார். பள்ளி பாடப்புத்தகத்துல நடிகர் விஜயகாந்த் பத்தி வரணும். அவர் சொன்னதைத்தான் நான் சொல்ல நினைக்கிறேன். சத்திரியனுக்குச் சாவில்லை!” என்று பேசியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “கேப்டன் என்னைத் தயாரிப்பாளராக்கியவர். நடிகர் சங்கத் தேர்தலில் அவரை ராதாரவியும், வாகை சந்திரசேகரும் நிற்க வைத்தார்கள். அப்போது நடிகர் சங்கம் கடனில் இருந்தது. அப்போது மலேசியாவில் நடிகர் சங்க விழாவை நடத்தினார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் வசூல் குறித்து அங்குள்ள ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அவர் கேப்டனை ஏமாற்ற நினைத்தார். அப்போது விஜயகாந்த், அந்த ஏற்பாட்டாளரைப் பிடித்து சுவரில் அறைந்தார். அதன் பிறகே அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அந்தப் பெரிய தொகையை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். இப்படியாகப் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்காக அவர் தன் ரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.