ராமேசுவரத்தில் உற்சாக வரவேற்பு: ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். ராமேசுவரத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் நேற்று (ஜன.19) மாலை பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இரவில் ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

தமிழக பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பஞ்சகரை சாலைக்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்தார். அங்கு அவர் முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். திருச்சியில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் மூலமாக ராமேசுவரம் சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுங்கிலும் குழுமியிருந்த பொதுமக்களும், பாஜகவினரும் மலர் தூவி பிரதமரை வரவேற்றனர்.

கார் கதவை திறந்து நின்று, கையை அசைத்தபடி பாஜகவினர் வாழ்த்துகளை ஏற்றார். பின்னர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார். கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பைஜாமா, ஜிப்பா அணிந்து கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள திருமண்டபத்தில் அமர்ந்து ராமாயணம் பாடப்படுவதை கேட்க இருக்கிறார் பிரதமர் மோடி.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், நான்குரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.கூடுதல் காவல் துறை இயக்குநர் மேற்பார்வையில் 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 14 காவல் கண் காணிப்பாளர்கள், 13 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி /துணை காவல் கண்காணிப்பாளர் என 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.