தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டியினைத் தொடங்கி வைத்த பிறகு கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று விட்டார். இதனையடுத்து இன்று திருச்சி திருவரங்கம் கோயிலுக்கு வருகைதர உள்ளார். இதற்கிடையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று பல்வேறு முக்கிய பிரமுகர்களும் மோடியை சந்தித்துப் பேசினார்கள்.

அந்த வகையில் நடிகர் அர்ஜுனும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பலரும் “அர்ஜுன் பா.ஜ.கா-வில் இணையவுள்ளாரா?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன், “என்னுடைய கோயிலுக்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் வருவேன் என்று சொல்லி இருக்கிறார். கேஷுவலாகத்தான் சந்தித்துப் பேசினேன்.
மோடியை முதல் முறையாக இப்போதுதான் சந்தித்து இருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்க குடும்பத்தில் எல்லோருக்கும் பிரதமர் மோடியைப் பிடிக்கும். அவர் இன்று இங்கே வந்திருப்பதாகத் தகவல் தெரியவந்தது. இதனால் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார்.

அதன்படி இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்.” தான் பா.ஜ.க-வில் இணைந்து விட்டதாகப் பரவிய செய்தி குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அர்ஜுன், “அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது” என்று பதிலளித்திருக்கிறார்.