புதுடெல்லி: நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பல முக்கிய பிரபலங்கள் அயோத்திக்கு வந்திறங்கி உள்ளனர். நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ், கங்கணா ரணாவத், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பாபா ராம்தேவ் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் நாளை திறக்கப்பட உள்ள ராமர் கோயில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிமிருந்தும் பல முக்கியப் பிரபலங்களும் அயோத்தி வந்துள்ளனர்.
இப்பட்டியலில் ஆன்மீகவாதிகள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், மடாதிபதிகள் எனப் பலரும் இடம் பெற்றுள்ளனர். உபியில் தொடரும் கடும் குளிர் மற்றும் பனியின் காரணமாக பெரும்பாலான அழைப்பாளர்கள் இன்றே அயோத்திக்கு வந்து சேர்ந்து விட்டனர்.
ஆன்மீகவாதிகளில், கர்நாடகாவிலிருந்து வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், யோகாசான புகழ் பாபா ராம்தேவ், பாகேஷ்வர் மடத்தின் பீடாதீஷ்வரர் திரேந்தர் கிருஷ்ண சாஸ்திரி, பிரபலப் பக்தி பிரச்சாகரான மொராரி பாபு உள்ளிட்டோர் வந்துள்ளனர். திரையுலக நட்சத்திரங்களில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விவேக் ஓபராய், அனுபம் கெர், பவன் கல்யாண், கங்கணா ரணாவத் உள்ளிட்ட பலரும் அயோத்திக்கு வந்துவிட்டனர்.
இவர்களில் பலரும் லக்னோவிற்கு வந்து அங்கிருந்து சாலை வழியாக அயோத்தி அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை ஜனவரி 22ல் கோயில் விழாவை முடித்த பின் இரவு அல்லது நாளை மறுநாள் திரும்ப உள்ளனர்.
நாளை விழா முடிந்ததும் பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஒரு சிறு சந்திப்பு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோயில் வளாகத்திலேயே திட்டமிடப்பட்டுள்ள மதிய உணவின் சந்திப்பாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தொலைக்காட்சிகளில் ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் பிரபலமான பத்ரி விஷ்வகர்மாவும் அயோத்திக்கு வந்துள்ளார். இவர் தனது வழக்கமான பாணியில் ராமர் கோயில் வடிவமைப்பிலான தேர் ஒன்றை தனது தலைமுடியில் இழுத்தபடி வந்துள்ளார். தனது ஊரான தமோவிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவிற்கு இதை இழுத்து வந்தார் பத்ரி. அன்றாடம் சுமார் 50 கி.மீ தொலைவிற்கு அந்த தேரை இழுத்து அயோத்தி வந்தடைந்துள்ளார்.