புதுடெல்லி: பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “குழந்தை ராமர் இன்று அயோத்தி தாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இத்துடன், தான் ராம ஜோதியை ஏற்றியுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாட முன்னணி இந்து அமைப்புகள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டனர்.
அனைவர் வீடுகளிலும் மாலை கார்த்திகை தீபம்போல் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ராமரைப் போற்றி வணங்குவோம் என பாஜக தலைவர்களும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு ராம ஜோதி ஏற்ற வலியுறுத்தியுள்ளார்.