கேரளா
கேரளாவில் உள்ள ராமர் கோவில்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின. திருச்சூர் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலில் காலை முதலே குவிந்தவர்கள் பக்தி பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகளுடன் மனமுருகி ராமரை வழிபட்டனர். கோட்டயம், மலப்புரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ‘நாலம்பலம்’ என அழைக்கப்படும் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கணன் ஆகியோரின் கோவில்களில் நடந்த பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். எர்ணாகுளம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில், மூவாட்டுபுழா திருக்களத்துார் ஸ்ரீராமசுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் கோல்கட்டாவில், துர்கா தேவியை ராமர் வணங்கியதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி ஊர்வலம் நடந்தது. பைகுந்த நாத் கோவிலில் துவங்கி வடக்கு கோல்கட்டாவில் உள்ள சித்தரஞ்சன் அவென்யூவில் உள்ள, 80 ஆண்டுகள் பழமையான ராமர் கோவிலில் நிறைவுபெற்ற ஊர்வலத்தில் ராம கீர்த்தனைகள், பஜனைகள் இசைக்கப்பட்டன. ஊர்வலத்தில் சென்றவர்கள் ராமர், சீதை, ஹனுமன் ஆகியோரின் படங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
புதுடில்லி
தலைநகர் புதுடில்லியில் ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஷேக் சாராய் பகுதியில் நடந்த ராமர் வாழ்க்கை வரலாறு தொடர்பான பாராயணத்தில் மாநில அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் பங்கேற்றார். அதிஷி, திலீப் பாண்டே, துர்கேஷ் பதக் உள்ளிட்ட அமைச்சர்கள் ராமர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். ஐ.டி.ஓ., பீரேலால் பவனில் ஆம் ஆத்மி சார்பில் நடத்தப்பட்ட ராம்லீலா நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ராம கீர்த்தனைகள் பாடினர்.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டில் உள்ள 51,000 கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஜாம்ஷெட்பூரில் ஸ்ரீலட்சுமி நாராயண் கோவிலில் பிரமாண்ட ரங்கோலியை பெண்கள் வரைந்தனர். 3,000 கிலோ வண்ணப் பொடியை பயன்படுத்தி, 165 அடி நீளம், 125 அடி அகலத்தில் ஓவியக் கலைஞர் விவேக் மிஸ்ராவால் வரையப்பட்ட ராமர் படத்தை ஏராளமானோர் ஆச்சர்யத்துடன் ரசித்தனர். பஜனைகள், கீர்த்தனைகளை தொடர்ந்து கோவில் முழுதும் 11,000 விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தது.
அமித் ஷா வழிபாடு
புதுடில்லியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜந்தேவாலன் கோவிலில் நடந்த நிகழ்வில், நட்டாவுடன் மாநில தலைவர் விரேந்திர சச்தேவா கலந்து கொண்டார். புகழ்பெற்ற பிர்லா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று ராமரை வழிபட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement