கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடனேயே, இந்தியா கூட்டணியின் வேலைகளைத் துரிதப்படுத்தியது காங்கிரஸ். குறிப்பாக, சீட் பகிர்வு பேச்சு முன்னெடுக்கப்பட்டது. இன்னொருபக்கம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில், திரை மறைவில் பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்பட்டாலும், இறுதியில் மல்லிகார்ஜுன கார்கே ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

இது ஓய்ந்ததும், சீட் பகிர்வு எவ்வாறு இருக்கும் என்பது புதிராக இருந்தது. இப்படியிருக்க, மேற்கு வங்கத்தில் சீட் பகிர்வு விஷயத்தில், “காங்கிரஸுக்கு இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்குவோம், சீட் பகிர்வு விஷயத்தில் எங்களின் பேச்சை சிலர் கேட்பதில்லை” என முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவந்தார்.
பதிலுக்கு, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும், மம்தாவை `சந்தர்பவாதி’ என விமர்சித்தார். இத்தகைய பரபரப்பான சூழலில், “காங்கிரஸுடன் எந்த உறவும் இல்லை. ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். எனவே, மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்தே களமிறங்குவோம்” என மம்தா இன்று அதிரடியாக அறிவித்தார்.

இத்தனைக்கும், “மம்தா பானர்ஜி, எனக்கும், எங்கள் கட்சிக்கும் மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொள்கிறார்கள். ஆனால், இது இயல்பானதுதானே தவிர, இரு கட்சிகளுக்கிடையிலான உறவை சீர்குலைக்காது” என நேற்றுதான் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்த நிலையில், மம்தாவிடமிருந்து இத்தகைய அறிவிப்பு வந்ததையடுத்து, `மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியாது!’ என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
மம்தா விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ `பா.ஜ.க-வை தோற்கடிக்க விரும்புகிறோம், பா.ஜ.க-வை தோற்கடிக்க எதையும் செய்வோம்’ என்று மம்தா கூறியிருக்கிறார். மேலும், மம்தாவும், திரிணாமுல் காங்கிரஸும் இந்தியா கூட்டணியின் வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை எங்களால் நினைத்துகூட பார்க்க முடியாது. இந்தியா கூட்டணி மேற்கு வங்கத்தில் ஒரு கூட்டணி போலவே செயல்படும். எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது, இந்தியா கூட்டணி ஒற்றுமையாக மேற்கு வங்கத்தில் போட்டியிடும்.

கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் மம்தாவை மதிக்கிறார்கள். நீண்ட பயணங்களின்போது சில நேரங்களில் ஸ்பீட் பிரேக் வரும். எனவே, பேச்சுவார்த்தையின் மூலம் இதில் நாங்கள் தீர்வைக் கண்டுபிடிப்போம். பா.ஜ.க-வை தோற்கடிப்பதே மம்தாவின் நோக்கம், அதே நோக்கத்துடன் நாளை மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நுழைகிறது.” என்று கூறினார்.
மேலும், மேற்கு வங்கத்தில் நுழையும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து காங்கிரஸ் தன்னிடம் எதுவும் கூறவில்லை என மம்தா கூறியதிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே, யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு இந்தியா கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் பலமுறை அழைப்பு விடுத்ததாக ஜெய்ராம் ரமேஷ் தற்போது தெரிவித்திருக்கிறார்.