கடந்த வாரம் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தனக்கு முதல் பரிசு அறிவிக்காததால், இரண்டாம் பரிசை வாங்க மறுத்துச் சென்ற வீரர் அபி சித்தர், கடந்த 24-ஆம் தேதி புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில் முதலிடம் வந்து கார் பரிசு பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் கடந்த பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்தில் தொடங்கி பாலமேடு, அலங்காநல்லூர் என அதிகமான மக்கள் கலந்துகொள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது.
கடந்த 17-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடந்த போட்டியில் அதிக காளைகளை பிடித்ததாக கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் இரண்டவாது இடம் வந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ‘நான்தான் அதிக மாடுகளை பிடித்தேன், முதல் பரிசு அறிவிக்கப்பட்டதில் சதி நடந்துள்ளது’ என்று கூறிய அபிசித்தர், இரண்டாம் பரிசை வாங்காமல் புறக்கணித்துச் சென்றார். அப்போது நம்மிடம் பேசிய அபி சித்தர், “அமைச்சர் மூர்த்தியின் தலையீட்டால் எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. நான்தான் அதிகமான காளைகளை பிடித்தேன். எனக்கு கார் பரிசு கூட தேவையில்லை, என்னை முதல் இடம் என்று அறிவித்தாலே போதும். ஆனால், என்னை புறக்கணித்து அமைச்சர் மூர்த்தியின் தொகுதியை சேர்ந்தவருக்கு முதல் பரிசு கொடுக்க முடிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரத்தை பார்க்கட்டும், ஜல்லிக்கட்டில் அரசியல் செய்கிறார்கள். எனக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்வேன்” என்ற அபி சித்தர், மறுநாள் மதுரை கலெக்டரிடமும் புகார் மனுவும் அளித்தது பரபரப்பை ஏற்படுதியது.
“பரிசு வழங்குவதில் பாகுபாடு பார்க்கவில்லை, இங்கு எல்லோரும் ஒன்றுதான், அரசு அலுவலர்களும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் நன்றாக கவனித்துதான் பரிசு அறிவிக்கப்படுகிறது..” என்று அபிசித்தரின் குற்றச்சாட்டை அன்றைய தினமே மறுத்தார் அமைச்சர் பி.மூர்த்தி.

இந்த நிலையில்தான் கடந்த 24-ஆம் தேதி அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டதில் 10 மாடுகளை பிடித்த அபி சித்தர் முதல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டார்.
அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மகேந்திரா தார் ஜீப்பும், ஒரு லட்சம் ரூபாயும் கலெக்டர் சங்கீதா வழங்கினார். இதை பார்த்து மைதானத்தில் இருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அபி சித்தர், “முதல் பரிசு பெற்றது பெருமையாக இருக்கிறது. அலங்காநல்லூரில் முதல் பரிசு பெறுவேன் என நினைத்தேன், இப்போது கீழக்கரையில் பெற்றுள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
ஒரு போட்டியில் முதல் பரிசுக்கு புறக்கணிக்கப்பட்டதாக சொல்லி அமைச்சர் மீது குற்றம்சாட்டிய வீரர், மற்றொரு போட்டியில் முதல் பரிசு பெற்று அதே அமைச்சர் முன்னிலையில் பரிசு பெற்ற சம்பவம் மதுரையில் கவனம் ஈர்த்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY