கிளாம்பாக்கம் vs கோயம்பேடு – அடம்பிடிக்கும் ஆம்னி பஸ்… அசராத அரசு… பாதிப்பு மக்களுக்கு?!

சிக்கு கோலம் போல எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியாமல் சர்ச்சைப் புள்ளிகளைச் சுற்றியே வலம்வந்து கொண்டிருக்கிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம். `ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கவேண்டும், கோயம்பேட்டுக்கு வரக்கூடாது ‘என அரசு தரப்பு கடுமையாக உத்தரவிட, `கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கு போதுமான இடமே இல்லை, அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்தபிறகு அங்கிருந்து இயக்குகிறோம்’ எனக்கூறி அரசு உத்தரவுக்கு முரண்டு பிடித்து கோயம்பேட்டிலிருந்தே இயக்க முயற்சி செய்தது ஆம்னி பேருந்துகள் தரப்பு. இந்த இருதரப்புகளின் குடுமிப்பிடிச் சண்டையில் சிக்கி சீரழிவது என்னவோ பயணிகள் என்ற பொதுமக்கள் தான்!

கோயம்பேடு பேருந்து நிலையம்

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்துமுனையம் திறக்கப்பட்ட பிறகு, கோயம்பேட்டிலிருந்து இயங்கிவந்த தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போதே தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளும் இனி கோயம்பேட்டுக்குப் பதிலாக, கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கவேண்டும் என தமிழக அரசு தரப்பில் சுற்றறிக்கை வெளியிட விவகாரம் பற்றியெறியத்தொடங்கியது.

சர்ச்சைக்கு சுழிபோட்ட சுற்றறிக்கை:

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சார்பில் வெளியிடப்ப்பட்ட சுற்றறிக்கையில், “ஜன.24 -ம் தேதி இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. இதற்கு ஏற்றாற்போல் RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ECR மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும், சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் சித்தூர், RED HILLS வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது!” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்

ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்:

இந்த நிலையில், அரசின் உத்தரவை ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், “தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்குவது சாத்தியமே இல்லை! 2 நாள் மட்டும் காலஅவகாசம் கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்பாகவே கோயம்பேட்டில் புக்கிங் செய்துள்ள பயணிகளின் பயணம் கேள்விக்குறியாகும். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி உள்ளதால் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மாறாக அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்!” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சிஎம்டிஏ தலைவரும் அமைச்சருமான சேகர் பாபு, “ஜனவரி 24 முதல் கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும்!” எனத் தெரிவித்தார்.

குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்:

இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் முன்பாக 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்-ஓட்டுநர்களுக்கும் காவல்துறை-சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் களேபரம் வெடித்தது. கோயம்பேட்டிலிருந்து ஏற்கெனவே டிக்கெட் புக்கிங் செய்து காத்திருந்த பயணிகள் வலுக்கட்டாயமாக கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர் சேகர் பாபு

மேலும், தென்மாவட்டங்களிலிருந்து கிளாம்பாக்கத்தைத் தாண்டி சென்னை பெருநகருக்குள் கோயம்பேட்டை நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளும் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டு, பாதிவழியிலேயே கிளாம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இவை தவிர, தை பூசம், குடியரசு தினம், வார இறுதிநாட்கள் என தொடர் விடுமுறையைக் கழிக்க தங்கள் ஊருக்குச் செல்ல முற்பட்டிருக்கும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பயணம் மேற்கொள்ள ஆட்டோ, கார்களில் சுமார் ரூ.500 முதல் ரூ.1500 வரை கட்டணம் கேட்பதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

எதிர்கட்சிகள் கண்டனம்:

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொடர் விடுமுறையால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் முன்பதிவு செய்து கோயம்பேடு வந்தடைந்துள்ள வேளையில் காவல்துறையை வைத்து பேருந்துகள் உள்ளே-வெளியே செல்ல இயலாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர். முன்பதிவு செய்து பேருந்து நிலையம் வந்த பயணிகளை ‘உள்ளே போகாதீர்கள்!பேருந்து இங்கிருந்து இயங்காது! ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் செல்லுங்கள்’..என மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி மிரட்டி வருகின்றனர். இந்த அரசு மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது… கருணாநிதி பெயரில் கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது. அடிப்படை வசதிகள் வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை! திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை இன்னும் பிடிக்க முடியவில்லை. அப்பாவி மக்களையும் ஆம்னி‌ பேருந்து உரிமையாளர்களையும் மிரட்ட 500 போலிஸ் குவிப்பு! முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு!” என கடுமையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார்.

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சொன்ன விளக்கம்:

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கோயம்பேட்டை விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.