வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரியில் வனவிலங்குகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்றும் காட்டுமாடுகளே வேட்டைக் கும்பலுக்கு இரையாகி வருகின்றன. குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆண் காட்டுமாடு ஒன்று துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உயிரிழந்தது கிடந்தது. சாலையில் நடந்த இந்த வேட்டைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், சிறுத்தையின் கால் நகங்களுக்காக வேட்டையாடப்பட்டதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதேபோல், கூடலூர் பகுதிகளில் காட்டுமாடுகளை துப்பாக்கி மூலம் சுட்டு வேட்டையாடப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. வேட்டையாடப்பட்ட காட்டுமாடுகளின் கால், தலை மற்றும் தோல் போன்றவற்றை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டுமாடு ஒன்று உடலில் தோட்டா பாயந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்டை குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், ” கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ஓவேலி, சூண்டி பகுதியில் காட்டுமாடு ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் ஆய்வு செய்ததில், காட்டுமாட்டின் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் இரண்டு தோட்டாக்கள் துளைத்திருப்பதை உறுதி செய்தோம். சுட்டுக்கொல்லப்பட்ட இந்த ஆண் காட்டுமாட்டிற்கு சுமார் 10 வயது இருக்கலாம். கூறாய்வு செய்து சேகரித்த உடல் பாகங்களை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். வேட்டையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் ” என்றனர்.

நீலகிரியில் தொடரும் வனக்குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், ” நீலகிரியில் வனவிலங்கு வேட்டை என்பது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. தடுக்க வேண்டிய வனத்துறையோ மூடி மறைக்கவே முயற்சி மேற்கொண்டு வருகிறது ” என கொந்தளிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY