விழுப்புரம்: “கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் 273-ம் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக குரல் கொடுத்துள்ளார். இன்று பாஜக அதைத்தான் சொல்கிறது” என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘என் மண், என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியது: “தமிழகத்தில், மக்களுக்கு ஒரு அரசியல், ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியல் என்று இரண்டுவிதமான அரசியல் உள்ளது.
ஆளுகின்றவர்களின் குழந்தைகள் 3 மொழிகள் கூட படிப்பார்கள். ஆனால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழிகள் மட்டும்தான் படிக்க முடியும். அரசு தொடர்புடையை அனைத்து விஷயமும் மக்களுக்கு சேவை செய்யாமல் ஊழல் செய்து கொண்டுள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள இந்த ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே இந்த அவலம். இலாகா இல்லாத அமைச்சர்களுக்கு மாத மாதம் ரூ 1.05 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 சதவீதம் உள் உற்பத்தி நடைகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் உள் உற்பத்தி 2.6 சதவீதமாகும். மனித வளர்ச்சி என்று எடுத்துகொண்டால் கடைசி இடத்தில் அரியலூர், அடுத்து பெரம்பலூர், மூன்றாவது தேனி, நான்காவது விழுப்புரம் 0.561 சதவீதமாகும். தமிழகத்தில் முழுமையாக அரசியலை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய அரசை திட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இக்கட்சிகள் நடத்திய மாநாட்டில் மத்திய அரசை எதிர்த்தே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். விசிக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை கொண்டுவரக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் 273 ம் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக குரல் கொடுத்துள்ளார். இன்று பாஜக அதைத்தான் சொல்கிறது. 16-வது நிதிகுழுவில் மாநில நிதி பகிர்வை அதிகரிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் 2004-ல் 30.5 சதவீதம் மாநில நிதி பகிர்வாக இருந்தது. 2014-ல் 32 சதவீதமாக உயர்த்தினர். மோடி ஆட்சியில் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டியல் இன மக்கள் உயர்வுக்காக மத்திய அரசு 2022-23-ம் ரூ.16,422 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இதில் 10,446 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினர். மத்திய அரசில் பட்டியல் இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் உட்பட 76 அமைச்சர்களில் 12 பேர் அதாவது 16 சதவீதம் பட்டியல் இன அமைச்சர்கள் உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 3 பேர் பட்டியல் இனத்தவர் அமைச்சர்கள் உள்ளனர். அதாவது 10 சதவீதம் உள்ளனர். திருமாவளவனுக்கு பகலிலேயே கண் தெரியாது. வேங்கைவயல் விவகாரம், சென்னையில் திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர் சிறுமியை கொடுமைப்படுத்தியதையும், இந்தியாவிலேயே அதிக பட்டியல் இன மக்களுக்கு கொடுமை நடைபெறுவதையும், இரட்டை குவளை முறை, கோயிலுக்கு விட மறுப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கவேண்டும்.
ஆனால் இவர் மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறியாக உள்ளார். திமுக வாரிசு அரசியலை உருவாக்கி தொண்டர்களுக்கு துரோகம் செய்துவருகிறது. குடும்ப ஆட்சி ஜனநாயகத்தை கரையான் போல அரித்துவிடும். தமிழகத்தை காப்பாற்றவேண்டிய கடமை உள்ளது. இந்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி தரம் குறித்து நடத்திய ஆய்வில் தமிழகத்தில் தென்னிந்தியாவில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் நீட் தேர்வை சொல்வார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 10 மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 4 பேர், அகில இந்திய அளவில் 50 பேரில் 10 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரதமருக்கு உலகில் 18 விருதுகள் கொடுக்கப்படுள்ளது. அதில் 8 விருதுகள் இஸ்லாமிய நாடுகள் கொடுத்துள்ளது. அவர்களுக்கு தெரியாததா? மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழக முதல்வர் கட்டமைத்துவருகிறார். மோடியை எதிர்ப்பவர்கள் தனக்கென்று அடையாளம் இலலாமல் தன் அப்பாவின் அடையாளத்துடன் இருப்பவர்கள்தான்.
பொன்முடிமீது 3 வழக்குகள் நடைபெற்றுவருகிறது. அதில் ஒரு வழக்குக்கு தீர்ப்பு வந்துள்ளது. அவர் தப்பவே முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் 3.50 லட்சம் பேருக்கு அரசுப்பணி கிடைக்கும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. தற்போது கடந்த 30 மாத திமுக ஆட்சியில் 1.75 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்கவேண்டும். ஆனால் 10,321 பேருக்கு மட்டுமே அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் ( தேர்தல் அறிவிப்பு) வந்துவிடும்” இவ்வாறு அவர் கூறினார். இந்த யாத்திரையில் மாநிலத்துணைத்தலைவர் ஏஜி சம்பத், மாவட்டத்தலைவர் விஏடி கலிவரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.