இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. பவதாரிணியின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வசந்தபாலனும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் என் முதல் படம் அமைந்தது. அந்தப் படத்திற்காக அடிக்கடி ராஜா சார் இல்லத்துக்குச் செல்வேன். ஹாலைத் தாண்டி முதல் அறையில் கார்த்திக் ராஜாவின் கம்போசிங் நடக்கும்.

இளையராஜா அவர்களின் தி.நகர் இல்லத்தைப் பற்றி ஒரு கதையே எழுதலாம். அத்தனை சம்பவங்கள் அவ்வளவு மனிதர்கள் வருவார்கள், செல்வார்கள். பரபரப்பாய் இருக்கும். ராஜா சாரைச் சந்திக்க வருகிற நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஒரு பக்கம், கார்த்திக் மற்றும் யுவனைச் சந்திக்க வருகிற இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் ஒரு பக்கம்.
யுவன், பவதாரிணியின் நண்பர்கள் வட்டம் பெரியது. இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். சிலசமயம் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனையும் அங்குப் பார்த்திருக்கிறேன்.
சில நாள்களில் இன்னும் பெருங்கூட்டம் கூடும். சிரிப்பும் பாட்டும் விளையாட்டும் கலந்து அந்த வீட்டைப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். விளையாட்டில் நம்மையும் சேர்க்கமாட்டார்களா என்ற ஏக்கம் ஏற்படும். மனதிற்குள் ‘வருடம் 16’ படத்தில் வருகிற ‘பழமுதிர்சோலை’ பாடல் கேட்கும். அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரியில் பவதாரிணியை அவர்கள் அம்மா இழுத்து வந்து பாட வைப்பார்கள். சிறு தேவதையின் குரல். பாடி விட்டு மீண்டும் பவதாரிணி விளையாட ஓடி விடுவார். பலமுறை நேராகப் பாடிக் கேட்டிருக்கிறேன். என் முதல் படத்தில் ‘முட்டைக்குள் இருக்கும் போது… முட்டைக்குள் இருக்கும் போது, என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு?’ என்ற குறும் பாடலை பவதாரிணிதான் பாடியிருந்தார்.

பவதாரிணி பாடும் பாடலில் ஒரு குழந்தைமையும் தெய்விகமும் கலந்து இருக்கும். ‘மயில் போல…’ பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ‘ஜனனி ஜனனி…’ பாடலைப் போல ஆன்மாவை உருக்கும் பாடல். பவதாரிணி இழப்பு செய்தி, நேற்றைய நாளை வண்ணமில்லாத ஒலி ஒளியில்லாத இசையில்லா நாளாக மாற்றி விட்டது. பவதாரிணிக்கு 47 வயது என்பதை மூளை ஏற்க மறுக்கிறது. மயில் போல பொண்ணுதான்….. இரக்கமற்ற காலம் எல்லாவற்றையும் இப்படிதான் குலைத்துப் போட்டு விளையாடுமோ?” என்று மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.