பாட்னா: பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இது குறித்து கூறுகையில், “இண்டியா கூட்டணியில் இருந்து ஜேடியு வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் நாளை டேராடூனுக்கும் பயணம் மேற்கொள்கிறேன். அதன்பிறகு டெல்லிக்கும் பயணம் செய்கிறேன். இது தொடர்பாக முழுத் தகவல் கிடைத்த பிறகு, உங்களுக்குச் சொல்கிறேன். என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்… அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் முயற்சி. நான் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன்.
இண்டியா கூட்டணி வெற்றி பெறும். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன், அப்போதுதான் எங்களால் நல்ல வலுவான போராட்டத்தை நடத்த முடியும். ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் மாற மாட்டார்கள், எங்களுடன் இருப்பார்கள்” என்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது.மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை,இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பிஹாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத கட்சியுடன் நிதிஷ் குமாருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது. அடுத்த வாரம் கூட்டணி மாறி புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
நிதிஷ்-தேஜஸ்வி அரசு வலுவாக உள்ளது: நிதிஷ் கூட்டணி மாறுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி, “பிஹாரில் நிதிஷ்-தேஜஸ்வி அரசு வலுவாக செயல்பட்டு வருகிறது, அது தொடரும். பிஹாரின் நலனுக்காக இந்த அரசு செயல்படுகிறது. நாற்காலிகளும், பதவிகளும் ஒரு பொருட்டல்ல. 2024 பொதுத் தேர்தல் பற்றி பாஜக பயப்படுகிறது. அதனால்தான் அனைவருக்கும் கதவுகளைத் திறக்கிறது பாஜக. தற்போதைய குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.