பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென அணி மாறி இருக்கிறார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தார். திடீரென பா.ஜ.க பக்கம் சாய்ந்துவிட்டார். பா.ஜ.க பக்கம் சாய்வதற்கு முன்பு, நிதிஷ் குமார் அளித்திருந்த பேட்டியில், குடும்ப அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹிணி ஆச்சார்யா, கடுமையாக பதிலடி கொடுத்து, சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பின்னர் நீக்கிவிட்டார். அதேசமயம் நிதிஷ் குமாரை சமாதானப்படுத்தும் விதமாக, ரோஹிணியின் பதிவு பிரதமர் மோடியைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் விளக்கமளித்தது.

ரோஹிணி வெளியிட்ட இந்தி பதிவின் ஸ்கிரீன் ஷாட், சோஷியல் மீடியாவில் வெளியானது. அதில் `கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், தங்களை சோசலிச சாதனையாளர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது நிதிஷ் குமார் அணி மாறியிருப்பது குறித்து ரோஹிணி ஆச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில், `குப்பை, மீண்டும் தொட்டிக்குள் செல்கிறது.

குப்பையின் துர்நாற்றத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு, குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ரோஹிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார்.
அவர்தான் தனது தந்தைக்கு ஒரு சிறுநீரகம் கொடுத்து, லாலுவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். நிதிஷ் குமார் அணி மாறியிருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `அடிக்கடி அணி மாறும் நிதிஷ் குமார், பச்சோந்திகளுக்கு போட்டியை கொடுக்கக்கூடியவர். நிதிஷ் குமாரின் இந்த துரோகத்தை பீகார் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் . நிதிஷ் குமார் அணி மாறுவார் என்று முன்பே தெரியும் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் குறிப்பிட்டுள்ளார்.