சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார்.
பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்ற மொத்தம் 40, 414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர் தரவரிசையில் இடம் பெற்ற 184 பேர் என 348 பேருக்கு நேரடியாக படங்கள் வழங்கப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் வீ. காமகோடி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. விழாவில் பங்கேற்பதாகச் சொல்லிவிட்டு அமைச்சர் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் vs தமிழக அரசு: ஏற்கெனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு பூசல்கள் நிலவுகின்றன. நீட் உள்ளிட்ட மசோதாக்களில் கையிப்பம் இடாதது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. இந்நிலையில், நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று கடந்த 23-ம் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். இது புதிய சர்ச்சையாக விடிந்தது.
காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தியை அவமதிக்கவில்லை என அதற்கு ஆளுநர் விளக்கம் தந்திருந்தார்.
இந்தச் சூழலில் நாளை (30-ம் தேதி) காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து வன்மை கலந்த நோக்கத்துடன் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் பல்வேறு வகையிலும் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ஆளுநர் தலைமையேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்திருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.