உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி (SC), எஸ்.டி (ST), ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில், அந்த இடங்களை பொதுப் பிரிவின் கொண்டு நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதலைப் பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்டிருக்கிறது. அதாவது, உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அதற்கான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில், அந்த இட ஒதுக்கீட்டையே நீக்கிவிட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பலாம்.

UGC-ன் இந்த வழிகாட்டுதலில், `உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி ஆள்சேர்ப்பில் நிரப்பப் படாத எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீடு செய்வதற்கு பொதுவான தடை இருக்கிறது. அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் `குரூப் ஏ’ பதவி பணியிடங்கள் காலியாக இருப்பதை, பொது நலன் கருதி அவ்வாறு இருக்க அனுமதிக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் காலியிடத்தை நிரப்ப, இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்கலாம்.

இதில், `குரூப் சி’ அல்லது ‘டி’ பதவி பணியிடங்கள் எனில் இட ஒதுக்கீடு நீக்குவதற்கான முன்மொழிவு பல்கலைக்கழக நிர்வாகக் குழுவுக்குச் செல்ல வேண்டும் மற்றும் `குரூப் ஏ’ அல்லது `பி’ எனில் முழு விவரங்களையும் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் பெற்ற பிறகு, பணியிடத்தை நிரப்பலாம். அதோடு, பதவி உயர்வு விஷயத்திலும், இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கு போதுமான எண்ணிக்கையில் எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் இல்லை என்றால், அத்தகைய காலியிடங்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டு, பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பலாம். இதற்கான, அதிகாரம் UGC அல்லது கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. UGC-ன் இத்தகைய அறிவிப்புக்கு எதிராக அரசியல் தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விசிக தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் திருமாவளவன்:
“இது ஒட்டுமொத்தமாக கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் திட்டம். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், `மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும், 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும், 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

எஸ்.டி பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப் பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. ஓ.பி.சி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும், 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும், 2,332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை. ஐ.ஐ.டி-களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐ.ஐ.எம்-களில் எஸ்.சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை.
பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது. 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட `மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இடஒதுக்கீடு) சட்டம் 2019′ நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை’ என்று பதிலளித்திருந்தார். நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

ஒருபுறம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜக அரசால் நிறுத்தப்படுகிறது. இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது. இது பா.ஜ.க-வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் படிக்கக் கூடாது என்பதுதான் மனுவாத சதித்திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம். பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
“இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல். மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, 0.77 சதவிகிதம் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணிகளில் 1.39 சதவிகித, உதவிப் பேராசிரியர் பணிகளில் 16 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியானவர்களை வெளியேற்ற கிரீமிலேயர் மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சமூகநீதிக்கு எதிரான பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளைப் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். எனவே, இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளைத் திரும்பப்பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளைப் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதைக் கட்டாயமாக்க வேண்டும். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்:
உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. யுஜிசியின் இந்த முன்மொழிவு தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தெளிவாக அநீதி இழைக்கிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் மோடி அரசு ‘குறுகிய அரசியல்’ மட்டுமே செய்கிறது. இந்த அநீதிக்கும், பாபா சாகேப்பின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கும் எதிராகவே எங்களது போராட்டம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை நிறுத்தும் இந்த திட்டம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பின்னர் UGC தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், “கடந்த காலங்களில் மத்திய கல்வி நிறுவனங்களில் (CEI) இட ஒதுக்கீடு பிரிவு பதவிகளுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. அத்தகைய இட ஒதுக்கீடு நீக்கம் இருக்காது. இட ஒதுக்கீடு பிரிவிலுள்ள அனைத்து பின்னடைவு பதவிகளும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நிரப்பப்படுவதை உறுதி செய்வது அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கியம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY