யார் இந்த ஹார்ட்லி…? இந்தியாவுக்கு ஆப்பு வைக்க இங்கிலாந்து இவரை எப்படி கண்டுபிடித்தது?

IND vs ENG, Tom Hartley In Tamil: டெஸ்ட் போட்டி என்றாலே கிரிக்கெட்டில் சுவாரஸ்யமற்ற, தூக்கம் வரவைக்கும் ஃபார்மட் என்ற பொதுவான கருத்தாக இருக்கும். 2K கிட்ஸ் என்றழைக்கப்படும் புத்தாயிரத்திற்கு பிந்தையவர்களுக்கு டெஸ்ட் என்றாலே என்னவென்றே தெரியாது போன்ற 90s கிட்ஸ் கருத்துகளும் அவ்வப்போது கிரிக்கெட் குறித்து பேச்சுகளின் போது எழும்.

இரு டெஸ்ட் போட்டிகள்

இதை முழுமையாக ஏற்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது என்பதே நிதர்சனம். ஆம், டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்துவமான அம்சங்களை இந்த தலைமுறையால் அனுபவித்திருக்க முடியாது என்றாலும், அவை சுவாரஸ்யமற்றது போன்ற கருத்துகளை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. 

எந்த நேரத்தில் எந்த அணி போட்டியில் ஆதிக்கத்தை தன்வசம் கொண்டுவரும், எந்தெந்த சூழலுக்கு வீரர்கள் எந்தெந்த வகையில் விளையாடுகிறார்கள் ஆகிய கூறுகளை கவனிக்கும்போது, டெஸ்டை விட சுவாரஸ்யமானது எதுவுமில்லை என்பதை யார் வேண்டுமானாலும் ஒத்துக்கொள்வார்கள். அதன் சமீபத்திய உதாரணம்தான் ஆஸ்திரேலியா – மேற்கு இந்திய தீவுகளுக்கு (AUS vs WI Gabba Test 2024) இடையிலான காபா டெஸ்ட் போட்டியும் (பகலிரவு போட்டி), இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Hyderabad Test 2024) அணிகளுக்கு இடையிலான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியும். 

டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யமானது… ஏன்?

இந்த இரு போட்டிகளும் ஜன. 25ஆம் தேதி தொடங்கியது. இரு போட்டிகளிலும் நான்காவது நாளான நேற்றோடு நிறைவடைந்தது. குறிப்பாக, இரு போட்டிகளும் நான்காவது நாள் மூன்றாவது செஷன் வரை வந்தது. இரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றது. மேலும், 216 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியாவும், 231 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவும் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியடைந்து உள்ளன. ஆஸ்திரேலியா 8 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்தன, அதாவது கடைசி வரை இவர்களுக்கும் வெற்றிக்கான வாய்ப்பிருந்தது.

டெஸ்ட் போட்டிகள் இத்தனை விறுவிறுப்புடன் மட்டுமின்றி தனக்கு உரித்தான நிதானத்துடனும் விளையாடப்படுவதை நிச்சயம் நாம் கவனித்தாக வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அதன் பரிணாமத்தை எட்டியுள்ளது எனலாம். பேட்டர்கள் மட்டுமின்றி பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட்டில் அவசியமானவர்கள் என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறுவது டெஸ்ட் கிரிக்கெட்தான். குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என துணை கண்டத்தில் இல்லாத நாடுகளும் யோசிக்கவைத்தது டெஸ்ட் கிரிக்கெட்தான் என்பைதயும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

பாஸ்பால் எனும் ‘சூதாட்டம்’

இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் அணுகுமுறையை சமீப ஆண்டுகளில் மாற்றியுள்ளது. அதாவது, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலமின் (Brendon McCullum) வருகைக்கு பின் அதன் அணுகுமுறை என்பது சுதந்திரமாக எந்த கட்டுப்பாடுமின்றி, தைரியத்துடன் விளையாடுவது என பரப்புரை செய்து வந்தது. ஆனால், அதை இதுவரை வெற்றிகரமாகவும் செய்து வந்துள்ளது. பிரண்டன் மெக்கலமின் வருகைக்கு பின் மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளை விளையாடி, 11 போட்டிகளை வென்றிருக்கிறது. 

இந்த அணுகுமுறை பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சு, பீல்டிங் அமைப்பு போன்றவற்றிலும் அவர்கள் முயற்சிக்கின்றனர். வழக்கமான பந்துவீச்சு, பீல்டிங் என்றில்லாமல் தைரியமான சில முடிவுகளை பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) களத்தில் எடுக்கிறார். டாம் ஹார்ட்லியை (Tom Hartley) முதல் இன்னிங்ஸில் 17 ஓவர்கள் தொடர்ந்து ஒரு முனையில் பந்துவீச வைத்தது. அவரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இருப்பினும், தங்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய சூழலுக்கு பழக வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

இங்கிலாந்தின் தேடுதல் வேட்டை

இரண்டாவது இன்னிங்ஸில் அதை அறுவடையும் செய்தனர். டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை எடுத்து, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வாரி சுருட்டினார். இதில் சொல்ல வேண்டிய முக்கிய விஷயம், யார் இந்த ஹார்ட்லி? (Who Is Tom Hartley?). இந்திய மண்ணில் நேரடியாக அறிமுகப்படுத்த இந்த வீரரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எப்படி கண்டடைந்தது என்பதுதான். அந்த சுவாரஸ்யமான கதையை இங்கே காணலாம். 

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கலாம், கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராப் கீ போன்றோர், இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலே திட்டமிட தொடங்கிவிட்டனர். நல்ல உயரமான மற்றும் துல்லியமாக பந்துவீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்களை அவர்கள் நாடு முழுவதும் உள்ள தங்களின் கவுண்டி சர்கியூட் முழுக்க தேடினர்.

டாம் ஹார்ட்லியை கண்டுபிடித்தது எப்படி?

அப்போது, லங்காஷயர் கவுண்டியில் அவர்கள் கண்டெடுத்த சுழல் சிறுத்தைதான் இந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளரான டாம் ஹார்ட்லி. இவரின் உயரம் 6 அடி 4 அங்குலம். துல்லியமாகவும் பந்தை சுழற்றக்கூடியவர். இவர் டெஸ்ட் போட்டியில் தற்போது அறிமுகமாவது வரை முதல் தர கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தவர் ஆவார். 

இவர் கடந்தாண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச அரங்குக்கு அறிமுகமாகனார். அப்போது அவருக்கு தொப்பியை வழங்கி கௌரவித்தவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப். பிளின்டாஃப்பும் லங்காஷயர் கவுண்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இவரை இங்கிலாந்து அணி ஒரு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடித்தது. முதல் தர கிரிக்கெட்டின் போது, களநடுவர்கள் iHawk கேமராக்களை அணிந்திருப்பார்கள். உயரமான ஹாட்ர்லி பவுலிங் ஆக்ஷன் இந்தியச் சூழலுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை அந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக இங்கிலாந்து அணி கண்டுபிடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகியல்

இவரின் பந்துவீச்சு ஆக்ஷன் சற்றே ஏறக்குறைய அக்சர் படேலின் பந்துவீச்சை போன்றிருக்கும். இவர் முதல் தர போட்டியில் பெரியளவில் சோபிக்கவில்லை, இருப்பினும், இங்கிலாந்து அணி கண் மற்றும் தொழில்நுட்ப சோதனை முறையில் மட்டும் தேர்ச்சியடைந்ததால் அவர் இந்தியாவுக்கு அலேக்காக தூக்கி வந்தனர். 

A week to remember pic.twitter.com/e5SDfafk6U

— Tom Hartley (@tomhartley100) January 28, 2024

மெக்கலம் – ஸ்டோக்ஸ் – ராப் கீ ஆகியோரின் தொலைநோக்கான திட்டமிடல்தான், அவர்களுக்கு நேற்றைய வெற்றியையும், இன்னும் நான்கு போட்டிகளுக்கான நம்பிக்கையையும் அளித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகியலில் ஒன்று… 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.