இரண்டாவது காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

'மதராசபட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆங்கிலேயே நடிகை எமி ஜாக்சன். அதன்பின் 'தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி, 2.0' பொங்கலுக்கு வெளிவந்த 'மிஷன் சாப்டர் 1' ஆகிய தமிழ்ப் படங்களிலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சில வருடங்கள் மும்பையில் வசித்து வந்த எமி பின்னர் இங்கிலாந்திற்கே சென்றுவிட்டார். அங்கு ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் திருமண நிச்சயம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே 2019ல் ஒரு ஆண் குழந்தைக்குத் தாய் ஆனார் எமி. சில வருடங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

பின்னர் எட்வர்டு வெஸ்ட்விக் என்ற ஆங்கிலேயே நடிகரை எமி காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் எமி. இந்நிலையில் நேற்று எமி, எட்விக் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலை உச்சியில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர்.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் எமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.