கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 17 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவைக் கொன்றுவிட்டதாக போலீஸில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சிறுவன் முதலில் நேற்றைய தினம் காலை ஒன்பது மணியளவில், கே.ஆர்.புரம் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, `இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா?’ என்று அங்கிருந்த மற்ற அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, `இன்ஸ்பெக்டர் இன்னும் வரவில்லை, 10 மணிக்குதான் வருவார்’ என்று சிறுவனிடம் கூறிய போலீஸ் அதிகாரியொருவர், `எதற்காக இங்கு வந்தாய்?’ எனக் கேட்டிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த சிறுவன், “நான் என்னுடைய அம்மாவைக் கொன்றுவிட்டேன்” என்று கூறியதும் காவல் நிலையமே அதிர்ச்சிக்குள்ளானது. அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அறையில் அந்த சிறுவனை அதிகாரிகள் அமரவைத்தனர். அதோடு, போலீஸ் பெண் அதிகாரியொருவர் சிறுவனிடம் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அதையடுத்து, சிறுவனின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சிறுவனின் தாயார் தலையில் பலத்த காயத்துடன் சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அருகில் சென்ற போலீஸார், அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில், சிறுவனின் தாயார் தனியார் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியையை என்றும், சிறுவன் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ மாணவன் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், சிறுவன் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில், காலை உணவு எதுவும் சமைக்காததால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் தாயை சிறுவன் கொலைசெய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், “காலை உணவு சமைக்காததால் சிறுவன் தன்னுடைய தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தின் போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுவன், இரும்புக் கம்பியால் தாயின் தலையில் பலமாக அடித்தார். முதலில் மயக்கமடைந்துவிட்டார் என்று நினைத்து தாயின் முகத்தில் சிறுவன் தண்ணீரைத் தெளித்தார். ஆனால், தாய் எழுந்திருக்கவேயில்லை. பின்னர், அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை உணர்ந்த சிறுவன், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காவல் நிலையத்துக்கு நடந்தே சென்றார்” என்று கூறினார்.
மேலும், குடும்பத்தைப் பற்றி விளக்கிய போலீஸ் அதிகாரி, சிறுவனின் தந்தை ஒரு விவசாயி என்றும், வேலைக்காக அவர் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், சிறுவனின் அக்கா வெளிநாட்டில் படித்து வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அக்கம்பக்கத்தினரின் கூற்றுப்படி, `சிறுவனும், தாயும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொள்வார்கள். ஆனால், இந்தளவுக்குப் போகாது’ என்று கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY