வாஷிங்டன்: கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நவீன ட்ரோன்களை நம் நாட்டுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
நம் முப்படைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் தயாராகும் முக்கிய ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.
ஆர்வம் காட்டியது
அந்த வகையில், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது, எம்.க்யூ., 9பி ரக ட்ரோன்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. இதற்கு, ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, இந்த வகை ட்ரோன்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இந்நிலையில், 31 ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க, அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:
இந்திய மதிப்பில் 33,000 கோடி ரூபாயில் 31 எம்.க்யூ. 9பி ட்ரோன்கள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இரு நாட்டு உறவுகளும் மேலும் மேம்படும். குறிப்பாக, சர்வதேச அளவிலான கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இந்தோ – -பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும். மொத்தமுள்ள 31 ட்ரோன்களில், இந்திய கடற்படைக்கு 15, ராணுவம் மற்றும் விமானப் படைக்கு தலா எட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வல்லமை கொண்டவை
ராணுவத்தினர் பயன்படுத்தும் இந்த ட்ரோன்கள், இடைவிடாது 40 மணி நேரம் அனைத்து காலநிலைகளிலும் பறக்கும் திறன் கொண்டவை.
வான்வெளியில் பாதுகாப்பாக ஊடுருவும் திறன் கொண்டவை. எதிரி இலக்கு எங்கு மறைந்திருந்தாலும், குறி தவறாமல் அழிக்கும் வல்லமை கொண்டவை.
தொலைவில் இருந்தே துல்லியமாக படங்களை எடுக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்