தேவ்கர்: ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரத ஒற்றுமை யாத்திரையின் ஒரு பகுதியாக ஜார்க்கண்டின் தேவ்கர் பகுதியை ராகுல் காந்தி நேற்று சென்றடைந்தார். அங்குள்ள பாபா வைத்தியநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். முன்னதாக ஜார்க்கண்டின் கோடா பகுதியில் அவர் பேசியதாவது:
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டில் பிரிவினையை தூண்டி வருகிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து வருகிறது. நாங்கள் அன்பை முன்னிறுத்தி செயல்படுகிறோம். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல விரும்புகிறோம்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி பெரும் தொழிலதிபர்களின் கடன்களை மட்டுமே ரத்து செய்கிறார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறார். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்றனர்.
ஜார்க்கண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது. பாஜகவின் சதித் திட்டம் வெற்றி பெற இண்டியா கூட்டணி அனுமதிக்காது. பாஜகவிடம் அதிகாரமும் பண பலமும் இருக்கிறது. அதற்கு அஞ்ச மாட்டோம். பாஜகவின் பிரிவினை அரசியலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.