மக்களை சந்தோஷப்படுத்தணும்: சந்தோஷத்தில் சாம்ஸ்

120 சினிமாக்கள், 60 விளம்பர படங்கள், 10க்கும் மேற்பட்ட சீரியல்கள், பல நாடகங்களில் நகைச்சுவையாக நடித்து காமெடி நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருப்பவர் நடிகர் சாம்ஸ். புதிய படம் ஒன்றின் டப்பிங்கில் இருந்தவரிடம் பேசிய போது தனக்கே உரித்தான பாணியில் கேள்விகள் ரெடியாக இருந்தால் படபட என போகலாம் என்றவாறு பேட்டிக்கு தயாரானார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து…
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சி தான். சுவாமிநாதன் என் உண்மையான பெயர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக சேர்ந்தேன். சின்ன வயதில் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டிய நபராக வேண்டும் என்ற ஆசை. மற்றவர்களை காட்டிலும் நான் சற்று கலகலப்பான ஆள். என் பேச்சும் அப்படி தான் இருக்கும். இதை கவனித்த நண்பர் ஜெயபிரகாஷ் எல்லோரையும் கலகலப்பாக இருக்க வைப்பதாக பேசும் நீ ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என்றார். மற்ற நண்பர்களுடன் இணைந்து சென்னைக்கு அனுப்பினார்.

சென்னைக்கு வந்த போது ஒவ்வொரு இயக்குனர் அலுவலகமாக ஏறி இறங்கினேன். அப்போது தான் நாடகங்களில் நடித்தால் என்ன என தோன்றியது. மறைந்த நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸிமோகன் நாடக குழுவில் இணைந்தேன். முதல் நாடகத்தில் என் குரல் மட்டும் ஒலித்தது. அது மேடையில் ஒலிக்க கேட்டு நண்பர்கள் ஊக்கமூட்டினர். படிப்படியாக நாடகங்களில் சிறிய ரோல்களில் நடிக்க துவங்கினேன். அத்துடன் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்தேன்.

இதற்கிடையில் திருமணம் நடந்தது. மனைவி ஆசிரியை. அவர் என்னை புரிந்து கொண்டு,''நான் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன். நீங்கள் கலையை பார்த்து கொள்ளுங்கள்,'' என தைரியம் கொடுத்தார். அஜித் நடித்த காதல் மன்னன் என் முதல் படம். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் மனங்கொத்தி பறவை, அறை எண் 305 கடவுள், கருப்பசாமி குத்தகைதாரர், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து வாய்ப்புகள் கிட்டின. பயணம் படம் ஒரளவு பெயர் பெற்று தந்தது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நகைகடை அதிபர் மகனாக நடிகர் வடிவேலுவிடம் நகையை பறிகொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் மக்களிடம் எனக்கு அடையாளத்தை பெற்று தந்தது.

இதுவரை 120 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து விட்டேன். இடையில் 60க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறேன். எல்லா நகைச்சுவை நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். நாகேஷ் தான் எனக்கு துாண்டுகோல். பலரும் நான் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு சாயலில் இருப்பதாக கூறுவது சந்தோஷம் தான். தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன்.

தொடர்ந்து மக்கள் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. நல்ல மனிதர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.